அமெரிக்காவில் கொரோனா காலத்தில் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கிய விமான நிறுவனங்கள், தற்போது கூடுதல் விமானங்கள் இயக்க தேவை உள்ள சூழலில் விமானங்களை இயக்க ஆளில்லாமல் தவிக்கின்றன. நூற்றுக்கணக்கான விமானங்கள் கடந்த சில தினங்களில் இரத்து செய்யப்பட்டுள்ளன.
கொரோனா தொற்றில் இருந்து உலகம் வேகமாக மீண்டெழுந்து வருகிறது. தடுப்பூசிகள் மற்றும் கட்டுப்பாடுகளை நீக்கியதன் மூலம் பயணத் தேவை அதிகரித்து வருவதால் அதிகமான விமானங்களை இயக்கும் சூழல் உள்ளது. ஆனால் கொரோனா காலத்தில் பல விமான நிறுவனங்கள் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியது. சில நிறுவனங்கள் ஊழியர்களை காத்திருப்பில் வைத்தது. இதனால் அவர்கள் வேறு பணிகளுக்கு செல்லத் தொடங்கி விட்டனர். இந்த நிலையில் தற்போது விமான சேவை அதிகரித்து இருக்கும் நிலையில் விமானங்களை இயக்க பணியாளர் பற்றாக்குறையை விமான நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன.
அமெரிக்காவில் சனிக்கிழமையன்று ஃப்ளைட் அவேர் தரவுகளின்படி, வானிலை தொடர்பான இடையூறுகள் மட்டுமல்லாமல் ஊழியர்கள் பற்றாக்குறையால் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் இந்த வார இறுதியில் நூற்றுக்கணக்கான விமானங்களை இரத்து செய்துள்ளது.
வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் 800 க்கும் மேற்பட்ட விமானங்களை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் இரத்து செய்தது. ஞாயிற்றுக்கிழமை 400 க்கும் மேற்பட்டவிமானங்களை இரத்து செய்வதாக முன்கூட்டியே அறிவித்தது.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் சீமோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
காத்திருப்பில் இருக்கும் 1,800 விமான ஊழியர்களைத் திரும்பப் பெறுகிறோம். டிசம்பர் இறுதிக்குள் மேலும் 600 பேரை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் 4,000 விமான ஊழியர்களை வழக்கமான பணி சூழலுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பயணிகள் ஒரே நாளில் மீண்டும் முன்பதிவு செய்ய முடிந்தது, நமது நிறுவனம் 50 நாடுகளில் 350 இடங்களுக்கு உலகளவில் 6,700 தினசரி விமானங்களை இயக்குகிறோம். ஒரு புதிய மாதத்தின் தொடக்கத்தில் செயல்பாடுகள் விரைவாக” மீட்டமைக்கப்படும் என்று நம்புகிறேன் என கூறினார்.