ஏற்கனவே சட்டபூர்வமாகச் செய்த திருமணத்தை மறைத்து, வெளிநாட்டில் காதலியைத் திருமணம் செய்தவருக்கு 24 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இந்த சம்பவம் நடந்தது.
இயோ சிக் கோங் (55) என்பவர் ஏற்கனவே திருமணம் செய்திருந்த போதும், அதனை மறைத்து இன்னொருவரைத் திருமணம் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
முதல் திருமணத்திலிருந்து விவாகரத்து பெற்ற இயோ 2005ஆம் ஆண்டில் டான் என்பவரை முறைப்படி திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.
2006ஆம் ஆண்டில் இயோ மலேசியரான 47 வயது பெண்ணுடன் காதல் வசப்பட்டார். ஆனால், தனக்குத் திருமணமாகிவிட்டது என்ற உண்மையை அவர் காதலியிடம் சொல்லவில்லை.
2011ஆம் ஆண்டு, இயோவும் அவரது காதலியும் மொரீஷியஸ் தீவில் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்தனர்.
அந்தத் திருமணச் சான்றிதழைக் கண்டுபிடித்த இயோவின் மனைவி டான், சென்ற ஆண்டு மே மாதம் காவல்துறையிடம் புகார் அளித்தார்.
2018ஆம் ஆண்டு, இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்தனர். விவாகரத்து வழக்கு தொடர்கிறது.
இரு மனைவிகள் அல்லது இரு கணவர்கள் கொண்டிருக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 7 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்க சிங்கப்பூர் சட்டத்தில் இடமுண்டு.