சீனாவில் 1000 நாள்களுக்கும் அதிகமாகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த கனடியக் குடிமக்கள் இருவர் தற்போது கனடாவை நோக்கி விமானத்தில் பயணம் செய்வதாகக் கனடியப் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 2018 இல் மைக்கல் கோவ்ரிக், மைக்கல் ஸ்பவொர் ஆகிய இருவரும் உளவுக்குற்றச்சாட்டின் பேரில் சீனாவில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சீனத் தொலைத்தொடர்பு நிறுவனமான Huawei யின் தலைமை நிதியதிகாரியான மெங் வான்ஷோ கனடாவில் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
முன்னாள் அரசதந்திரியான கோவ்ரிக்கும் ஆலோசகரான ஸ்பவொரும், தகுந்த காரணமின்றிப் பழிவாங்கும் நோக்கில் சிறையிடப்படடதாகத் ட்ரூடோவின் நிர்வாகம் சீனாவைக் குற்றஞ்சாட்டியது.
இருப்பினும், பெய்ஜிங், அந்த இரு சம்பவங்களுக்கும் சம்பந்தமில்லை என வலியுறுத்தி வருகிறது.
கனடாவின் நட்புநாடுகள், பங்காளிகள் ஆகியவை தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட அந்த இருவரையும் விடுவிக்க ஆதரவு வழங்கியதற்குத் ட்ரூடோ நன்றி தெரிவித்தார்.