கத்தோலிக்க தேவாலயத்தின் ஒரு முக்கிய கனேடியப் பிரிவு, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக மத்திய அரசுக்காக நடத்தப்பட்ட உறைவிடப் பாடசாலைகளில் ஏற்பட்ட கொடூரங்களுக்கு முதல் முறையாக மன்னிப்பு கோரியுள்ளது.
கனேடிய கத்தோலிக்க ஆயர்களின் மாநாடு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,
“எங்கள் கத்தோலிக்க சமூகத்தின் சில உறுப்பினர்கள் செய்த கடுமையான துஷ்பிரயோகங்கள், பூர்வீக மொழிகள், கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தை ஒடுக்குதல் ஆகிய செயல்பாட்டில் நேரடியாக ஈடுபட்டுள்ள மற்றும் ஏற்கனவே தங்கள் சொந்த இதயப்பூர்வமான மன்னிப்பை வழங்கிய கத்தோலிக்க நிறுவனங்களுடன், கனடாவின் கத்தோலிக்க ஆயர்கள், நாங்கள் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம், சந்தேகத்திற்கு இடமின்றி மன்னிப்பு கேட்கிறோம்”
பழங்குடி மாணவர்கள் அனுபவித்த துன்பங்களைத் தங்களால் உணர முடிவதாகக் கத்தோலிக்க ஆயர்கள் கூறினர்.
18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 1990கள் வரை வலுக்கட்டாயமாகப் உறைவிட பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்ட சுமார் 1,200 பிள்ளைகளின் கல்லறைகள் அண்மையில் அடையாளம் காணப்பட்டன.
பழங்குடிக் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 150,000 பிள்ளைகள் உறைவிட பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டனர். அவற்றில் பல கத்தோலிக்க திருச்சபையால் நடத்தப்பட்டன.
அவர்களின் பாரம்பரிய வாழ்க்கை இயல்புகளிலிருந்து மாற்றி, அடையாளம் இழக்கச் செய்ய இந்த உறைவிட பாடசாலைகள் செயற்பட்டன.
ஆனால், தலைமை ஆசியர்களும், ஆசிரியர்களும் பழங்குடி மாணவர்களைப் பாலியல், உடல் ரீதியாகத் துன்புறுத்தினர். பாலியல் கொடுமைக்குள்ளாக்கினர். பட்டினியால் வாடினர். ஆயிரக்கணக்கான குழந்தைகள் இறந்தனர். அவர்கள் பாடசாலை வளாகத்திலேயே புதைக்கப்பட்டனர். சுமார் 15,000 பிள்ளைகள் இப்படி இறந்திருக்கலாமென கருதப்படுகிறது.
கனடாவில் வரும் 30ஆம் திகதி, உண்மை, நல்லிணக்கத்துக்கான முதல் தேசிய தினம் அனுசரிக்கப்படவுள்ள நிலையில், கத்தோலிக்க தேவாலயம் பழங்குடி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளது.
எனினும், இந்த மன்னிப்பை பழங்குடி மக்களின் உரிமைக்காக போராடும் அமைப்புக்கள் சந்தேகிக்கின்றன. மன்னிப்பு கோரல் ஒரு சூழ்ச்சியென்பது அவர்கள் குற்றச்சாட்டு.
கடந்த காலத்திலிருந்து கனடிய தேவாலயங்கள் கற்றுக்கொள்ளவில்லை, இழப்பீடு வழங்கல் மற்றும் சட்டத்திலிருந்து தப்பிக்கவே இந்த சூழ்ச்சியை அரங்கேற்றுவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
உறைவிடப் பள்ளி தீர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, தப்பிப்பிழைத்தவர்களுக்கு 25 மில்லியன் டொலர் திரட்ட தேவாலயம் ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டது. இறுதியில், 4 மில்லியன் டொலருக்கும் குறைவாகவே செலுத்தப்பட்டது.
உறைவிட பாடசாலைகளை நடத்துவதில் தேவாலயத்தின் பங்குக்காக தனிப்பட்ட பாதிரியார்கள் மற்றும் ஆயர்கள் மன்னிப்பு கேட்டாலும், வெள்ளிக்கிழமை வரை அதிகாரப்பூர்வ மன்னிப்பு கேட்கப்படவில்லை. வெள்ளிக்கிழமையே கனேடிய கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு மன்னிப்பு கோரியுள்ளது. எனினும், வத்திக்கான் மன்னிப்பு கேட்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்த போதும், வத்திக்கான் ஒருபோதும் முறையாக மன்னிப்பு கேட்கவில்லை
வரும் டிசம்பரில் பழங்குடிக் குழுவினர் வத்திக்கான் சென்று போப்பைச் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளதை கனேடிய ஆயர்கள் மாநாடு சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், பழங்குடி நல செயற்பாட்டாளர்கள், போப் கனடாவிற்கு வந்து பழங்குடிகளிடம் மன்னிப்பு கோர வேண்டுமென வலியுறுத்தி வருகிறார்கள்.