கனடாவின் 44வது பாராளுமன்றத்தை தெரிவு செய்வதற்காக பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இதுவரை ஏழு தமிழ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
செப்ரெம்பர் 20ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளது.
லிபரல் கட்சியின் சார்பில் மூவரும், கொன்சவேடிவ் கட்சியின் சார்பில் இருவரும், ப்ளொக் கியூபெகோயிஸ், என்.டி.பி சார்பில் தலா ஒருவரும் என 7 தமிழ் வேட்பாளர்கள் இம்முறை போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் ஐவர் முதல் தடவையாக தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
லிபரல் கட்சியின் சார்பில் அனிதா ஆனந்த் மீண்டும் ஓக்வில்லி தொகுதியிலும், ஹரி அனந்தசங்கரி மீண்டும் ஸ்கார்பரோ – ரூஜ் பார்க் தொகுதியில் போட்டியிடுகிறார்கள். முதல் தடவையாக வைத்தியர் அல்போன்ஸ் ராஜகுமார் Sசஸ்கடூன் மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
கொன்சவேடிவ் கட்சியின் சார்பில் சஜந்த் மோகனகாந்தன் யோர்க் தெற்கு- மேற்கு தொகுதியிலும், மல்கம் பொன்னையன் ஸ்கார்பரோ மத்திய தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் போட்டியிடும் முதலாவது தேர்தல் இதுவாகும்.
கியூபெக் மாகாணத்தில் மாத்திரம் வேட்பாளர்களை களம் இறக்கும் ப்ளொக் கியூபெகோயிஸ் கட்சி சார்பில் ஷோபிகா வைத்தியநாதசர்மா ரோஸ்மண்ட் – LA Petite – Patrie தொகுதியில் இம்முறை போட்டியிடுகின்றார். ஒரு தமிழ் வேட்பாளர், ப்ளொக் கியூபெகோயிஸ் சார்பில் போட்டியிடுவதும், கியூபெக் மாகாணத்தில் போட்டியிடுவதும் இதுவே முதல் தடவையாகும்.
என்.டி.பி சார்பில் அஞ்சலி அப்பாதுரை வான்கூவர் கிரான்வில்லே தொகுதியில் போட்டியிடுகிறார். இவரும் முதல் தடவையாக தேர்தல் அரசியலில் போட்டியிடுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.