பெருந்தோட்டத்துறைச் சார்ந்த நான்கு முக்கிய தொழிற்சங்கள் ஒன்றிணைந்து சம்மேளனமாக செயற்பட தீர்மானித்துள்ளன.
இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம், மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் ஆகியன இவ்வாறு ஒரே அணியாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளன.
இது தொடர்பாக இன்று நடந்த கூட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுசெயலாளர் வடிவேல் சுரேஷ், மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. ராதாகிருஷ்ணன், தொழிலாளர் தேசிய சங்கம் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது, பெருந்தோட்டத்துறை மக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகளின்போது, ஒரே தொழிற்சங்க சக்தியாக செயற்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இதன்போது கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கருத்து வெளியிடுகையில், மீனவர்கள், விவசாயிகள், ஆசிரியர் அதிபர் தெருவுக்கு வந்து போராடுகின்றனர். நாங்கள் இன்னமும் தேயிலை, இறப்பர் பெருந்தோட்ட தொழிலாளர்களை தெருவுக்கு இறக்கவில்லை.
அப்படி இறங்கி போராடும் பாஷைதான் அரசாங்கத்துக்கு புரியும் என்றால் அதன்படி போராட நாம் தயார்.
நாட்டின் நிலைமையையும், தொழிலாளர்களின் நிலைமையையும் மனதில் கொண்டு நாம் அரசாங்கத்துக்கு அவகாசம் வழங்குகிறோம். நாமே நேரடியாக கட்சி அங்கத்தவர்களுடன்தான் இப்போது போராடுகிறோம். விரைவில் தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள். இதை எங்கள் பலவீனமாக நினைக்க வேண்டாம். நியாயமான தீர்வு வராவிட்டால், தொழிலாளர்களை தெருவுக்கு இறக்கும் நிலைமை உருவாகும்.
நாட்டில் விலைவாசி பலமடங்கு உயர்ந்து விட்டது. சம்பளம் ஆயிரம் என்று எழுத்தில் எழுதி கொடுத்து விட்டார்கள். ஆனால், எத்தனை நாள் வேலை என தீர்மானிக்கப்பட வில்லை.
வர்த்தமானியில் கால அடிப்படை சம்பளம் என கூறப்பட்டுள்ளது. அது என்ன கால அடிப்படை என்பதை தேடிப்பாருங்கள்.
நேற்று முதல் நாள் நாடாளுமன்றத்தில் தொழில் அமைச்சர் கொண்டு வந்த குறைந்தபட்ச சம்பளம் என்ற சட்டமூலத்தில், மாதத்திற்கு 25 நாள் வேலை என்ற கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதுதான் கால அடிப்படை. அப்படியானால், ஒருநாளைக்கு ஆயிரம் ரூபா என்றாலும், மாதம் 25 நாள் வேலை என்றாலும், ஒரு மாதத்திற்கு 25,000 ரூபா ஆகும்.
அரசாங்கத்தின் கணக்கு எப்படியோ தெரியவில்லை. தோட்டத் தொழிலாளரை தோட்ட நிறுவனங்களுடன் பேசி தீர்த்து கொள்ளுங்கள் என கூறிவிட்டு, அரசாங்கம் கைகளை கழுவிக்கொள்ள முடியாது.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைப்பது இல்லை என தனக்கு இதுவரை முறைப்பாடு கிடைக்கவில்லை எனவும் அமைச்சர் நிமல் சிறிபால சில்வா கூறுகிறார்.
இது ஆச்சரியம்தான். பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபா முறையாக கிடைப்பது இல்லை. அது “நிறை“ மற்றும் “எத்தனை நாள் வேலை“ என்பவற்றால் தடையாகிறது என்றார்.