திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்தது. விசிக தனிச்சின்னத்தில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியின் பேச்சு வார்த்தை சுமுகமாக ஆரம்பித்து திடீரென இழுபறியானது. திமுக தரப்பில் பிடிவாதமாக தொகுதிகளை குறைத்துக் கொள்ள கூறியதும், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட கேட்டுக்கொண்டதும் இழுபறிக்கு காரணமானது.
இடதுசாரிகளுக்கு தொகுதி எண்ணிக்கை குறைந்ததால் இழுபறி நீடித்தது. காங்கிரஸுக்கும் கேட்ட அளவில் பாதிகூட கிடைக்காததால் இழுபறி உண்டானது. இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் திமுகவுக்கும் நேற்று மாலையே தொகுதி உடன்பாடு முடிந்து திருமாவளவன் கையெழுத்திடும் நிலையில் கூட்டணிக்கட்சிகள் இடையே எழுந்த இழுபறி காரணமாக முடிவுகள் மாறலாம் என்பதால் திருமாவளவன் தாமதித்தார்.
இந்நிலையில் கூட்டணியில் பிரச்சினை இல்லை பேசித்தீர்க்கலாம் என திமுக தரப்பில் கூட்டணிக்கட்சிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டது. மதிமுகவை மாலை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனிடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் விசிக- திமுக உடன்பாடு ஏற்பட்டு 6 தொகுதிகளில் நிற்பது என முடிவானது.
இதையடுத்து அறிவாலயம் வந்த திருமாவளவன், ஸ்டாலின் இருவரும் கூட்டணி உடன்படிக்கையில் கையெழுத்திட்டு ஒப்பந்தம் உறுதியானது. விசிக உதய சூரியன் சின்னத்தில் 3 தொகுதிகளிலும், தனி சின்னத்தில் மூன்று தொகுதிகளிலும் நிற்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் 6 தொகுதிகளிலும் தனிச்சின்னத்தில் நிற்பதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இதி 4 தனி தொகுதிகளும், 2 பொதுத்தொகுதிகளும் அடங்கும் என தெரிகிறது. இதன் மூலம் திமுகவில் ஐயூஎம்எல், மமக, விசிக கட்சிகள் தொகுதி உறுதியாகியுள்ளது. இன்று மாலை மதிமுகவும் உறுதியாகிவிடும் என தெரிகிறது.
அடுத்தடுத்த நாட்களில் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளின் பிரச்சினைகளும் பேசித்தீர்க்கப்படும் என்று திமுக தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.