அஸ்திரேலியாவிற்கு படகுமூலம் அகதியாக சென்ற தமிழ் இளைஞர் ஒருவருக்கு மோசடி வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வாழும் எஸ்.செல்வராஜா (30) என்பவருக்கே பிரிஸ்பன் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இவர் சுமார் 30 மாணவர்களின் தொலைபேசிகளை அவர்களிடமிருந்து ஏமாற்றிப்பெற்று அதனூடாக பணமீட்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மாணவர் விசாவில் இருந்துகொண்டு வேலைவாய்ப்புக்காக தேடியலையும் மாணவர்களை வலைவீசிப்பிடித்து அவர்களது தொலைபேசியில் செயலி ஒன்றை பதிவேற்றித் தருவதாகக்கூறி அதனைப்பெற்றுச் செல்லும் இவர் தொலைபேசியைத் திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றிவிடுவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 மாதகாலத்தில் சுமார் 40 ஆயிரம் டொலர்கள்வரை குறித்த நபர் மோசடி புரிந்துள்ளதாகவும், இப்பணத்தை தனது மனைவியின் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைக்காக அவர் பயன்படுத்தியதாகவும் குறிப்பிடப்படுகிறது.
பிரிஸ்பன் நீதிமன்றில் இடம்பெற்ற இவ்வழக்கின்முடிவில் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் இது 3 மாதங்களில் இடைநிறுத்தப்படுகின்றபோதும் குறித்த 2 வருடங்களும் அவர் நன்னடத்தை பேணவேண்டும் என்பதாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2012ம் ஆண்டு படகு மூலம் ஆஸ்திரேலியா வந்த செல்வராஜா தற்காலிக விசா வழங்கப்பட்டு சமூகத்தில் வாழ அனுமதிக்கப்பட்டிருந்ததாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.