பிரதமர் மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் 31ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகிறார்.
ஜூலை 31 மற்றும் ஓகஸ்ட் 01 ஆகிய இரண்டு நாட்களில் யாழ்ப்பாணத்தில் சில நிகழ்வுகளில் மஹிந்த ராஜபக்ச கலந்து கொள்கிறார். இதற்கான நிகழ்ச்சி நிரல் வெளியாகியுள்ளது.
நூறு நகரங்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பிக்கும் தேசிய நிகழ்வு
வேலணையில் நடைபெறவுள்ளது. நிகழ்வில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
கலந்து கொள்ளவுள்ளார்.
நாவற்குழி ரஜமகா விஹாரையின் கோபுரத்தினை திறந்து வைக்கவுள்ளதுடன் மீள்குடியேற்ற அமைச்சின் மூலம் செயற்படுத்தப்படுகின்ற 182 வீடுகளுக்கான உரிமங்களை பயனாளர்களுக்கு வழங்கவுள்ளதுடன், 34 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விலும் பங்குபற்றவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, காங்கேசன்துறைக்கு செல்லவுள்ள பிரதமர், காங்கேசன்துறை திஸ்ஸ மஹா விகாரையின் பிக்குமாருக்கான விடுதி திறப்பு மற்றும் குறைந்த வருமானம் கொண்ட இரண்டு குடும்பங்களுக்கான வீடுகளையும் கையளிக்கவுள்ளார்.
பின்னர், வேலணை செல்லும் பிரதமர், நூறு நகரத் திட்டத்தின் இரண்டாம் கட்ட தேசிய
நிகழ்வை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
மறுநாளான ஞாயிற்றுக்கிழமை நல்லூர் கந்தசாமி கோயில் மற்றும் நயினாதீவு நாகவிகாரை ஆகியவற்றில் பிரதமர் மஹிந்த ராஜக்ஷ மத வழிபாடுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.
பின்னர், நயினாதீவு மக்களுக்கான நீர் வழங்கல் திட்டம், யாழ். நகர நீர் சுத்திகரிப்பு பணிகள் ஆகியவற்றையும் ஆரம்பித்து வைக்கவுள்ள பிரதமர், தாளையடி நீர்த் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்திலும் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைக்கவுள்ளார்.
அரசு யாழில் ஆரம்பிக்கும் திட்டங்களை போட்டி போட்டுக் கொண்டு டக்ளஸ் தேவானந்தா தரப்பும், அங்கஜன் இராமநாதன் தரப்பும் உரிமை கோருவது வழக்கம். சில சமயங்களில் இரண்டு தரப்பிற்கும் தெரியாமல் அரசு ஏதாவது திட்டத்தை ஆரம்பித்தாலும், தாமே அதை சிபாரிசு செய்வதாகவும் ஏதாவதொரு தரப்பு உரிமை கோரும்.
நூறு நகரங்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பிக்கும் தேசிய நிகழ்வு
வேலணையில் நடைபெறவுள்ளது. வேலணையை தெரிவு செய்தது தாமே என வழக்கம் போல யாழ்ப்பாணத்தின் இரண்டு அரச தரப்பு பங்காளிகளும் பிய்ச்சல் பிடுங்கலில் ஈடுபட ஆரம்பித்து விட்டனர்.
சொப்பன சுந்தரியின் காரை யார் வைத்திருக்கிறார்கள் என்ற விடை தெரியாத கேள்வியை போல, இதற்கும் விடை தெரியாமல் போவதுடன், இரண்டு தரப்பின் இழுபறிக்குள் பிரதமர் சிக்கி சின்னாபின்னப்பட போகிறார் என நெட்டிசன்கள் ஏற்கனவே கலாய்க்க ஆரம்பித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.