கெஸ்பேவவில் உள்ள ஒரு தனியார் ஆடை தொழிற்சாலையின் ஐந்து ஊழியர்கள் கொரோனா வைரஸின் டெல்டா திரிபால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
கெஸ்பேவ பகுதியில் இருந்து ஏராளமான கோவிட் நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகளின் துணைப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இதன் விளைவாக, தனியார் தொழிற்சாலை ஊழியர்களிற்கு பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டன. அத்துடன் அந்த பகுதியில் நடத்திய சில சீரற்ற சோதனை மாதிரிகள் மேலதிக ஆய்வுக்கு ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டன.
ஆடைத் தொழிற்சாலையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் ஐந்து மாதிரிகள் சந்தேகத்திற்குரியதாக உள்ளன. இது கொரோனா வைரஸின் டெல்டா திரிபாக அடையாளம் காணப்படுவதற்கான அதிக நிகழ்தகவு கொண்டதாக வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
தொழிற்சாலையின் 120 வரையான ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திங்கள் (19) மற்றும் நேற்று (20) நடத்தப்பட்ட சோதனைகளில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.