வீடு ஒன்றின் உரிமையாளரின் சாரத்தை எடுத்து உடுத்துக் கொண்டு அவரைப் போன்று பாசாங்கு காட்டி வீட்டிலிருந்த ஏழரைப் பவுண் தங்க நகைகளை திருடிச் செல்லப்பட்ட சென்ற சம்பவம் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள சுவிஸ் கிராமத்தில் திங்கட்கிழமை (01) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சம்பவதினமான திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் அறையில் இரு பிள்ளைகளும் முன்விறாந்தையில் தாயும் பிள்ளை ஒன்றும் வீட்டின் வெளிப்பகுதியில் வீட்டின் உரிமையாளர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்னர்.
இந்த நிலையில் வீட்டின் மலசல கூடத்தில் சிறிய யன்னல் அமைக்க விடப்பட்டிருந்து பகுதி வழியாக ஒருவர் உள்ளே நுழைந்து அங்கிருந்த உரிமையாளரின் ஒரு சாரத்தை எடுத்து கட்டிக் கொண்டு அறையினுள் புகுந்துள்ளார்.
அப்போது சத்தம் கேட்டு கண் விழித்த குறித்த வீட்டின் உரிமையாளரின் மனைவி, கணவர் பிள்ளைகள் தூங்கும் அறைக்கு சென்றுள்ளர் என அவதானித்த அவர் கணவர் என நினைத்து என்ன அறையில் செய்கின்றீர்கள் என கேட்போது, அமைதியாக காணப்பட்ட இந்த நபர் அறையிலிருந்து சில நிமிடங்களின் பின்னர் வெளியேறி சமையலறைப் பகுதிக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து படுக்கையில் இருந்து எழும்பிய பெண், மின்சாரத்தை போட்டபோது சமையலறை பகுதி கதவைத் திறந்து கொண்டு ஒருவர் செல்வதனைக் கண்டுள்ளார்.
பின்னர் வீட்டின் கதவை திறந்து வெளிப்பகுதி முகப்பைப் பார்த்தபோது கணவர் ஆழ்ந்த நித்திரையில் இருப்பதைக் கண்டு அறையின் அலுமாரியின் மேல் வைக்கப்பட்டிருந்த கைப்பையை எடுத்து பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த எழரை பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.