யூரோ கால்பந்து தொடரில் ‘ஏ’ பிரிவில் இருந்து இத்தாலி, வேல்ஸ் அணிகள் நொக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
யூரோ கால்பந்து தொடரில் நேற்றுமுன்தினம் ‘ஏ’ பிரிவில் கடைசி லீக் ஆட்டங்கள் நடைபெற்றது. இதில் ரோம் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் இத்தாலி 1-0 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை தோற்கடித்தது. அந்த அணி சார்பில் 39வது நிமிடத்தில் மேட்டியோ பெசினா கோல் அடித்து அசத்தினார். இத்தாலி அணிக்கு இது ஹட்ரிக் வெற்றியாக அமைந்தது.
இந்த வெற்றியின் மூலம் இத்தாலி அணி தனது பிரிவில் 9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. இத்தாலி தனது முதல் ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் துருக்கியையும், அடுத்த ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தையும் வீழ்த்தியிருந்தது.
சுவிட்சர்லாந்து
அதேவேளையில் பாகு நகரில் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து 3-1 என்ற கோல் கணக்கில் துருக்கியை வீழ்த்தியது. சுவிட்சர்லாந்து அணி சார்பில் 6வது நிமிடத்தில் ஹாரிஸ் செஃபெரோவிக்கும், 26 மற்றும் 68வது நிமிடங்களில் ஷெர்டன் ஷாகிரியும் கோல் அடித்தனர். சுவிட்சர்லாந்து அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற போதிலும் நொக்-அவுட் சுற்றுக்கு தகுதிபெற தவறியது. ஏனெனில் அந்த அணி 3 ஆட்டங்களில் ஒரு வெற்றி, ஒரு சமனிலை, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றது.
மாறாக இதே பிரிவில் 4 புள்ளிகள் பெற்ற வேல்ஸ் அணியானது கோல்கள் வித்தியாசத்தின் அடிப்படையில் நொக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. வேல்ஸ் அணி 3 கோல்களை அடித்த நிலையில்2 கோல்களை மட்டுமே வாங்கியிருந்தது. அதேவேளையில் சுவிட்சர்லாந்து அணி 4 கோல்களை அடித்த நிலையில் 5 கோல்களை வாங்கியிருந்தது.
இன்றைய ஆட்டம்
ரஷ்யா – டென்மார்க்
நேரம் : நள்ளிரவு 12.30
பின்லாந்து – பெல்ஜியம்
நேரம் : நள்ளிரவு 12.30
நேரலை: சொனி சிக்ஸ்