மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னுரிமையளிக்கப்பட்ட உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கான சினோஃபார்ம் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு 25,000 தடுப்பூசிகள் முதற் கட்டமாக கிடைக்கப்பெற்றுள்ளன.
அதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் இன்று செவ்வாய் கிழமை (8) கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர்.க.கருணாகரன், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நா.மயூரன் ஆகியோர்கள் ஆரம்பித்து வைத்தனர்.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் உள்ள கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உத்தியோகஸ்தர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிசாருக்கு முன்னுரிமையளிக்கப்பட்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன. பிரதேசத்தில் உள்ள அரச தனியார் அலுவலகங்களில் கடமையாற்றும் உத்தியோகஸ்த்தர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், 60 வயதிற்கு மேற்பட்டோர்கள், நீரழிவு நோய், குருதி அழுத்தத்திற்கு பாதிப்புற்றவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன.
கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக்,வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜ முதலி ஸ்டீவ் சஞ்சீவ் மற்றும் துறைசார் நிபுணர்கள் கலந்து கொண்டனர்.