அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பயன்படுத்துவதற்காக, பிரத்தியேகமான தொலைக்காட்சி பெட்டியொன்று வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் ரொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
தனக்கு பிரத்தியேகமான தொலைக்காட்சி பெட்டியொன்று தேவையென ரஞ்சன் ராமநாயக்க விடுத்த கோரிக்கைக்கமையவே ,இது வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதவிர, ரஞ்சன் ராமநாயக்கவின் பிரத்தியேக பயன்பாட்டுக்காக, மெத்தை, மின்விசிறி, குளியலறை வசதிகள் என்பன வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ரஞ்சன் ராமநாயக்க தனது பதவிக் காலத்தில் பயன்படுத்திய மாதிவெல உத்தியோகபூர்வ குடியிருப்பை மேலும் 6 மாதங்களிற்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க சமீபத்தில் தனது செயலாளர் மூலம் தனது உடமைகளை வைத்திருக்க சிறிது காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரியதாகவும், அவர் இந்த விஷயத்தை சபாநாயகருடன் விவாதித்து அந்த கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்ததாகவும் கூறினார்.