சீனாவைச் சேர்ந்த தந்தையும் மகனும், அதிக பெறுமதி வாய்ந்த இரத்தினக் கற்களை உள்ளாடைகளில் மறைத்து, இலங்கையிலிருந்து சீனாவுக்கு கடத்த முயன்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (13) இரவு 07.30 மணியளவில் நடைபெற்றது. 45 வயதான தந்தை மற்றும் 21 வயதான மகன், சீனாவின் சோங்கிங் நோக்கி புறப்பட உள்ள சோங்கிங் எயார்லைன்ஸ் OC-2394 என்ற விமானத்தில் ஏறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
குறித்த இருவரும் உடல் ஸ்கேன் பரிசோதனை செய்யப்படட போது, அவர்களது உடல்களில் கடத்த முயற்சிக்க மறைத்து வைத்திருந்த இரத்தினக் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இச் சம்பவம் தொடர்பாக சுங்க அதிகாரிகள் மேலும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த தந்தை, மகன் இருவரும் இலங்கையில் வசிப்பதற்கான வதிவிட விசாவை பெற்றிருந்த நிலையில், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.