கடந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீதி புனரமைப்பு பணிகள் பொருளாதார நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் அனுர ஆட்சியில் மீளவும் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
அதாவது ஏற்கனவே ஆரம்பித்த வேலைத்திட்டத்தை புதிதாக ஆரம்பிப்பது போன்ற தோற்றப்பாட்டை இப்போதைய ஆட்சியாளர் ஏற்படுத்தி தேர்தல் பிரச்சாரங்களையா செய்கிறீர்கள் என அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருடன் அப்பகுதி மக்கள் தர்க்கத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பொன்னாலை – பருத்தித்துறை கரையோர பிரதான வீதி அமைக்கும் பணியினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று (13) இடம்பெற்றது.
வல்வெட்டித்துறை பகுதியில் வீதி அமைக்கும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
இந் நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மாவட்டச் செயலாளர் ம. பிரதீபன் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வின் இறுதியில் அமைச்சர் வெளியேறிச் செல்லும் போது அங்கிருந்த இளைஞர்கள் சிலர் அமைச்சருடன் வாக்குவாத்த்தில் ஈடுபட்டனர். குறித்த வீதி புனரமைக்க கடந்த ஆட்சிக்காலத்தில் ஒதுக்கப்பட நிதி தான். ஆனால் நாடு வங்குறோத்து நிலைமை அடைந்ததன் காரணமாக அந்தப் பணிகள் இடை நிறுத்தப்பட்டிருந்தது.
இப்போது நீங்கள் உங்கள் கட்சிக்காரர்களை கூட்டி வைத்து புதிதாக போடுவது போல காண்பிக்கிறீர்கள்.
வீதி பணி ஆரம்பிப்பு என்று வந்து ஏதும் செய்யாமல் உங்கள் பிரசார நடவடிக்கையினை முன்னெடுத்து விட்டுச் செல்கிறீர்கள் என தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதன் போது அங்கிருந்த என்பிபி பாராளுமன்ற உறுப்பினர்கள் சமரசம் செய்ய முயன்ற போதும் அது பலனளிக்கவில்லை.