கிளிநொச்சி மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை, இனந்தெரியாதோர் கடத்த முற்பட்டதையும், தாக்கப்பட்டதையும் கடுமையாக கண்டித்து, வடமராட்சி ஊடக இல்லம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக வடமராட்சி ஊடக இல்லம் வெளியிட்ட அறிக்கையில், அரசியல்வாதிகளுக்கு எதிராகவும், சமூகப் பிரச்சினைகள், நிர்வாக முறைகேடுகள், ஊழல், சுற்றுச்சூழல் சீர்கேடு, சட்டவிரோதச் செயற்பாடுகள், போதைப்பொருள் பயன்பாடு போன்றவைகளுக்கு எதிராக தைரியமாக செய்திகளை வெளியிடும் தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதலானது, அவரின் ஊடக பணிகளை தடைசெய்யும் நோக்கத்துடனே மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 20 ஆண்டுகளாக ஊடகப் பணியில் ஈடுபட்டு, யுத்த காலத்திலும், அதன்பின்னரும் தைரியத்துடனும், நேர்மையுடனும் பணியாற்றிய தமிழ்ச்செல்வன், மக்களின் வாழ்வாதார சிக்கல்களை வெளிக்கொணரும் சிறப்பு வாய்ந்த ஊடகவியலாளராக விளங்குகிறார். இத்தகைய நபரின் மீதான தாக்குதல், மக்கள் நலனுக்கான எதிர்காலத்தின் மீதான அச்சுறுத்தலாகவே கருதப்படுகிறது.
ஊடகவியலாளர் மீதான இக்கடத்தல் முயற்சியும், தாக்குதலும், ஊடகத் துறையின் சுதந்திரத்துக்கும், ஊடகவியலாளர்களின் சுயாதீன செயற்பாடுகளுக்கும் மாறுதலாக விளங்குகின்றன. நாடு புதிய பாதையில் பயணிக்கின்றதாகக் கூறப்படும் இக்காலத்தில், இத்தகைய சம்பவங்கள் மக்கள் மத்தியில் அதிகமான பதற்றங்களை உருவாக்குவதுடன் ஊடகத் துறைக்கும் பெரிய சவாலாகக் காணப்படுகின்றன.
இச்சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தப்பட்டு, குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்கப்பட வேண்டும். அண்மையில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு போன்ற இடங்களில் ஊடகவியலாளர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதும், வாகனங்கள் எரிக்கப்பட்டதும் போன்ற சட்டவிரோத செயல்களுக்கான தீர்வுகள் இன்றியமையாதவையாகும். இந்த நிலைமை தொடராமல் தடுப்பதற்காக அரசு மற்றும் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமராட்சி ஊடக இல்லம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.