ஹைதராபாத்தில் கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, அவரது குடும்பத்தினருக்கு ‘புஷ்பா-2’ பட குழு சார்பில் ரூ.2 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது.
நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடத்த ‘புஷ்பா-2’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த 4-ம் தேதி இரவு திரையிடப்பட்டது. சிறப்பு காட்சியை காண நடிகர் அல்லு அர்ஜுன் வந்தார். அவரை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியதால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் நெரிசலில் சிக்கி ஹைதராபாத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவரது மனைவி ரேவதி (35) உயிரிழந்தார். இவரது மகன் ஸ்ரீதேஜ் (9) படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் ஸ்ரீதேஜ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் சிக்கடபல்லி காவல் நிலையத்தில் அல்லு அர்ஜுன் கடந்த 24-ம் தேதி ஆஜரானார். அவரிடம் போலீஸார் மூன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், அல்லு அர்ஜுனின் தந்தையும், தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் நேற்று ஸ்ரீதேஜ் சிகிச்சை பெற்றுவரும் ஹைதராபாத் கிம்ஸ் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார். ஸ்ரீதேஜின் தந்தை பாஸ்கருக்கு ஆறுதல் கூறினார். திரைப்பட வளர்ச்சிகழக தலைவர் தில்ராஜு உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அப்போது, அல்லு அர்ஜுன் தரப்பில் ரூ.1 கோடி, புஷ்பா திரைப்பட இயக்குநர் சுகுமார் சார்பில் ரூ.50 லட்சம், தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் சார்பில் ரூ. 50 லட்சம் என ரூ.2 கோடிக்கான காசோலையை பாஸ்கரிடம் வழங்கினர்.
பிறகு, செய்தியாளர்களிடன் பாஸ்கர் பேசும்போது, ‘‘அல்லு அரவிந்த் ஏற்கெனவே ரூ.10 கோடி நிதியுதவிக்கான வரைவோலை வழங்கியுள்ளார். தெலங்கானா அரசு சார்பில் அமைச்சர் கோமிட்டி ரெட்டி வெங்கட்ரெட்டியும் ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். எனது மகனின் முழு மருத்துவ செலவையும் இவர்களே ஏற்றுள்ளனர்’’ என்றார். பாஸ்கருக்கு நிரந்தர வேலை வாங்கித் தருவதாகவும் அல்லு அரவிந்த் ஏற்கெனவே உறுதி அளித்துள்ளார்.