மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்து, இதற்கு காரணமானவர்களை கைது செய்து சட்டத்தின் முன்னிறுத்தக் கோரி பிரதேச செயலகத்தின் முன்னால் உத்தியோகத்தர்கள் நேற்றைய தினம் (23) கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
கடந்த 20 ம் திகதி கோரளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் கிராம உத்தியோகத்தர் கடமை நிமித்தம் தனது பிரதேசத்திற்கு சென்று வரும்போது, சில நபர்களினால் தாக்கப்பட்டதை அடுத்து அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இவ்வாறு, கிராம உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்டவர்களை பொலிஸார் கைது செய்யவில்லை. இந்த தாக்குதலை கண்டித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இதனால் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகத்தின் முன்னால் ஒன்று திரண்டு தாக்குதலை கண்டித்து சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கைது செய்! கைது செய்! தாக்கியவரை, அரச உத்தியோகத்தரின் பாதுகாப்பை உறுதி செய்!, கடமையை செய்தால் உயிருக்கு அச்சுறுத்தலா?, அரச பணியாளர்கள் மீதான தாக்குதலுக்கு எப்போது தீர்வு? போன்ற வாசகங்களைக் கொண்ட பதாகைகளை ஏந்தியவண்ணம், கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து அங்கு வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வசந்த பண்டார குறித்த இடத்திற்கு வருகை தந்ததோடு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார்.
இதனைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றை கையளித்ததுயடுத்து பொலிஸ் பொறுப்பதிகாரி குறித்த சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாகவும், அவரை பொலிஸார் வலைவீசி தேடி வருவதாகவும், கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் உறுதிமொழி வழங்கியதை அடுத்து அங்கிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து தமது கடமைகளில் ஈடுபட சென்றனர்.