“மன்னிக்கவும்… நான் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை” என்று விஜய் கருத்துகள் குறித்த கேள்விக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
வேலூர் நிகழ்வில் கலந்துகொண்ட உதயநிதியிடம், நடிகர் விஜய் பேச்சு குறித்து கேட்டதற்கு, “மன்னிக்கவும்… நான் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை” என்றார். அதைத் தொடர்ந்து, மன்னராட்சி குறித்து ஆதவ் அர்ஜுனா பேசியது தொடர்பான கேள்விக்கு, “யாருங்க இங்க பிறப்பால் முதல்வரானது? மக்களால் தேர்ந்தெடுத்துதான் இருக்கிறோம். மக்களாட்சிதான் நடக்கிறது. இந்த அடிப்படை அறிவுகூட இல்லாமல் பேசி இருக்கிறார்” என்று ஆவேசமாக கூறினார் உதயநிதி ஸ்டாலின்.
முன்னதாக, சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்த ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய், “மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்களுக்கு அடிப்படை பாதுகாப்பை கூட உறுதி செய்ய இயலாத, கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி, இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு, என் மக்களோடு இணைந்து நான்விடும் எச்சரிக்கை. நீங்கள், உங்கள் சுய நலனுக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026-ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்” என்று பேசினார்.
அதே நிகழ்வில் பேசிய விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “பிறப்பால் அனைவரும் சமம் என்ற கருத்தியலை அம்பேத்கர் உருவாக்கியது போல, தமிழகத்தை ஒரு கருத்தியல் தலைவர் தான் ஆள வேண்டும். கொள்கை பேசிய கட்சிகள் இதுவரை அம்பேத்கரை மேடை ஏற்றவில்லை. 2026 தேர்தலில் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும்” என்று பேசியது குறிப்பிடத்தக்கது.
வேலூர் நிகழ்வு: வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா மற்றும் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் ரூ.128 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (டிச.7) காலை நடைபெற்றது. இதில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 247 கிராம ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் 4,844 பயனாளிக்கு ரூ.128 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசும்போது, “இந்தியாவின் விளையாட்டு தலைநகராக சென்னை வளர்ந்து வருகிறது. நகர பகுதியில் இருக்கும் விளையாட்டு வசதிகள் கிராமப் பகுதியில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இதன்மூலம் கிராம பகுதிகளில் இருந்து நிறைய விளையாட்டு வீரர்கள் உருவாவார்கள். இந்த அரசு மகளிருக்கான அரசாக செயல்படுகிறது. இங்கு மகளிருக்கான கடனுதவியை உங்கள் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் முதல்வர் வழங்குகிறார். இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்தி முன்னேற வேண்டும். இரண்டு கோரிக்கைகளை இங்கு அமைச்சர் துரைமுருகன் வைத்தார். அதன்படி இந்த விளையாட்டு மைதானத்துக்கு சுற்றுச்சுவர் கட்டப்படும். சிந்தடிக் ஓடுதளம் அமைக்கும் வாய்ப்பு குறித்து முதல்வருடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
முன்னதாக, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலை வகித்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த், எம்எல்ஏக்கள் நந்தகுமார், கார்த்திகேயன், அமலுவிஜயன், ஈஸ்வரப்பன், வில்வநாதன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.