26.1 C
Jaffna
December 12, 2024
Pagetamil
இலங்கை

புயலின் தற்போதைய நிலவரம் என்ன?

தற்போது இலங்கைக்கு அண்மையாக நிலைகொண்டுள்ள புயல் நிலவரம் தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தனது பேஸ்புக்கில் நேற்று (25) இரவு 8 மணியளவில் பகிர்ந்த தகவல்கள் வருமாறு-

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்காக உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது. நகரும் வேகம் மந்தமாக காணப்படுகின்றது. அம்பாறையின் பானம யிலிருந்து தென்கிழக்காக 238 கி.மீ. தொலைவில் அதன் மையம் காணப்படுகின்றது. நாளை காலை 8.00 மணியளவில் பானம இலிருந்து 140 கி.மீ. தூரத்தில் காணப்படும். நாளை மாலை 3.00 மணியளவில் அம்பாறைக்கு மிக அண்மித்து அம்பாறையில் இருந்து 82 கி.மீ. தூரத்தில் அதன் மையம் காணப்படும். இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 27 ம் திகதி அதிகாலை 2.00 மணியளவில் மட்டக்களப்பு நகரில் இருந்து 91 கி.மீ. இல் காணப்படும். அதன் பின்னர் நண்பகல் 1.00 மணியளவில் திருகோணமலையில் இருந்து 94 கி.மீ. தூரத்தில் காணப்படும். பின்னர் 27ம் திகதி மாலை 6.00 மணிக்கு முல்லைத்தீவில் இருந்து கிழக்காக 109 கி.மீ. தூரத்தில் இந்த புயல் காணப்படும். தற்போதைய நகரும் வேகத்தில் தான் இந்த புயலின் இடவமைவு மேற்குறிப்பிட்ட இடங்களில் காணப்படும். நகரும் வேகம் மாற்றமடைந்தால் இடங்களும் மாறும் என்பதைக் கருத்தில் கொள்க.

கரையைக் கடக்கும் இடம் இன்னமும் தெளிவாகவில்லை. தீர்மானமாக அறிந்ததும் தெரிவிக்கப்படும்.

ஆனால் இந்த புயல் நகரும் வேகம் குறைந்தால் எமது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆபத்து நிலை அதிகரிக்கும். பொதுவாக ஒரு புயல் கடலில் அதிகம் நிலை கொண்டால் தன்னை வீரியப்படுத்துகின்றது என அர்த்தம்.

தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் கன மழை இன்று இரவு முதல் இன்னமும் அதிகரிக்கும்.

அன்புக்குரிய மட்டக்களப்பு மாவட்ட மக்களே, தற்போது உங்களுக்கு கிடைக்கும் மழை இன்று இரவு 9.00 மணி முதல் மிக மிக கனமழையாக மாறி நாளை மாலை வரை நீடிக்கும். அனேகமாக பல இடங்களில் வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்கள் உண்டு.

அன்புக்குரிய திருக்கோணமலை வாழ் உறவுகளே, உங்களுக்கு இன்று கிடைத்த கிடைத்துக் கொண்டிருக்கின்ற மிகக் கனமழை தொடரும். பல பகுதிகள் வெள்ள அனர்த்த நிலைமையை எதிர்கொள்ளும்.

நாளை முதல் வவுனியா மாவட்டத்திற்கும் கன மழை கிடைக்க தொடங்கும்.

நாளை அதிகாலை முதல் குறிப்பாக காலை 7.00 மணி முதல் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மிகக் கன மழை கிடைக்க தொடங்கும். பல பகுதிகளுக்கும் வெள்ள அனர்த்த வாய்ப்புண்டு. குளங்களின் கீழுள்ள மக்களுக்கு வெள்ள அனர்த்த எச்சரிக்கையை முன் கூட்டியே வழங்குதல் உசிதமானது.

நாளை நண்பகலுக்கு பின்னர் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கும் கன மழை கிடைக்க தொடங்கும். யாழ்ப்பாண மாவட்டத்தின் வெள்ள அனர்த்த வாயப்புள்ள மக்கள் நாளை முதல் மிக மிக அவதானமாக இருப்பது அவசியம்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புண்டு. அம்பாறை மாவட்டத்தில் இன்று இரவு முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும்.

முன்னரே குறிப்பிட்டபடி நாளையும் நாளை மறுதினமும் (2024 நவம்பர் 26 மற்றும் 27) மிக முக்கியமான நாட்களாகும்.

இடி மின்னல் நிகழ்வுகளும் இடம்பெறும் என்பதனால் இடி மின்னல் தொடர்பிலும் மக்கள் அவதானமாக இருப்பது அவசியம். அந்த வகையில் இன்று இரவு மட்டக்களப்பு, திருகோணமலையிலும் நாளை காலை முதல் முல்லைத்தீவிலும் நாளை மாலை முதல் யாழ்ப்பாணத்திலும் பரவலாக இடி மின்னல் நிகழ வாய்ப்புள்ளது.

அன்புக்குரிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களே… வங்காள விரிகுடாவில் தோன்றியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மிக பாதிப்பை ஏற்படுத்தும் நாட்களை நாம் நெருங்குகின்றோம். நாளையும் நாளை மறுதினமும் நாங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இன்று மாலைவரையே பல பிரதேசங்களிலும் வெள்ள நீர் தேங்க தொடங்கியுள்ளது. நாளை முதல் ( மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைக்கு இன்று இரவு முதல்) நிலைமை மிக மோசமாக மாறும்.

எங்கள் தமிழ்மொழியில் ஒரு பழமொழி உண்டு. ” சாண் பாம்பானாலும் முழத்தடி கொண்டு அடி”. இந்த பழமொழி இந்த அனர்த்தத்துக்கு மிக பொருத்தமானது.
எதிர்பார்க்கப்படும் அனர்த்தப் பாதிப்பை விட கூடிய முன்னாயத்தத்தோடு நாம் இருந்தால் எமக்கு ஏற்படும் பாதிப்புக்களை கணிசமாகக் குறைக்க முடியும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சம்பூரில் பாலியல் துஷ்பிரயோகம் – பூசாரிக்கு 30 வருட கடூழிய சிறை!

east pagetamil

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைப்பு!

Pagetamil

நெற்றிக் கண்ணைத் திறத்தல்

Pagetamil

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் இறுதியானது!

Pagetamil

யாழில் 214 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

Pagetamil

Leave a Comment