25.5 C
Jaffna
January 13, 2025
Pagetamil
இந்தியா

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி சாதனை வெற்றி: 288 சட்டப்பேரவை தொகுதிகளில் 230 தொகுதிகளை கைப்பற்றியது

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி 230 தொகுதிகளை கைப்பற்றி சாதனை வெற்றி பெற்றுள்ளது. புதிய முதல்வர் யார் என்பதை பாஜக, சிவசேனாவின் ஷிண்டே அணி, தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் அணி ஆகிய 3 கட்சிகளும் இணைந்து முடிவு செய்து அறிவிக்க உள்ளன.

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 20-ம் தேதி நடைபெற்றது. இதில், ஆளும் பாஜக, சிவசேனா (முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி), தேசியவாத காங்கிரஸ் (துணை முதல்வர் அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. மகாயுதி கூட்டணியில் பாஜக 149, ஷிண்டே அணி 81, அஜித் பவார் அணி 59 தொகுதிகளில் போட்டியிட்டன. மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங் கிரஸ் 101, உத்தவ் தாக்கரே அணி 95, சரத் பவார் அணி 86 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தின.

வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. ஆரம்பம் முதலே பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி முன்னிலை வகித்தது. இதில், பாஜக 132 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சிகளான சிவசேனாவின் ஷிண்டே அணி 57 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் அணி 41 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக பாஜக கூட்டணி 230 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. கோப்ரி-பச்பகாடி தொகுதியில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வெற்றி பெற்றார். துணை முதல்வர்களான தேவேந்திர பட்னாவிஸ், நாக்பூர் தெற்கு மேற்கு தொகுதியிலும், அஜித் பவார், பாராமதி தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.

மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸுக்கு 16 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. அதன் கூட்டணி கட்சிகளான சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணிக்கு 20, தேசியவாத காங்கிரஸின் சரத் பவார் அணிக்கு 10, சமாஜ்வாதிக்கு 2 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒரு தொகுதி கிடைத்தன. உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே, வொர்லி தொகுதியில் 8,801 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மகாராஷ்டிராவில் தற்போது பாஜக கூட்டணியில் சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் துணை முதல் வர்களாகவும் உள்ளனர். தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் புதிய முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் வினோத் தாவ்டே கூறும்போது, ‘‘மகாராஷ்டிர சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் 26-ம் தேதி நிறைவடைகிறது. அதற்கு முன்பாக புதிய அரசு பதவியேற்க வேண்டும். புதிய முதல்வர் குறித்து பாஜக, ஷிண்டே அணி, அஜித் பவார் அணி இணைந்து முடிவு செய்யும். முதல்வர் யார் என்பதை 23-ம் தேதி இரவு அல்லது 24-ம் தேதி(இன்று) முடிவு செய்வோம்’’ என்றார்.

முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் ஆகியோர் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தனர். ஷிண்டே கூறும்போது, ‘‘உண்மையான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் எது என்பதை மக்கள் முடிவு செய்துள்ளனர்’’ என்றார். பட்னாவிஸ் கூறியபோது, ‘‘பிரதமர் மோடிக்கு ஆதரவாக மக்கள் உள்ளனர் என்பதை மகாராஷ்டிர தேர்தல் உறுதி செய்துள்ளது. புதிய முதல்வர் குறித்து 3 கட்சிகளும் இணைந்து முடிவு செய்யும்’’ என்றார். அஜித் பவார் கூறும்போது, ‘‘அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாங்கள் இணைந்து பணியாற்றுவோம். எங்கள் கூட்டணி நிலைத்திருக்கும்’’ என்றார்.

பாஜக அதிக இடங்களை கைப்பற்றி உள்ளதால், அக்கட்சியின் மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் புதிய முதல்வராக பதவியேற்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

சமூக நீதிக்கு வெற்றி: மோடி பெருமிதம் – மகாராஷ்டிரா தேர்தல் வெற்றியை தொடர்ந்து, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று வெற்றி கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இது வரலாற்று சிறப்புமிக்க வெற்றி. கடந்த 50 ஆண்டுகளில் வேறு எந்த கட்சிக்கும் இதுபோன்ற வெற்றி கிடைக்கவில்லை. இங்கு பொய், பிரிவினைவாதம், வாரிசு அரசியலை தோற்கடித்து, வளர்ச்சி, நல்லாட்சிக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்துள்ளனர். உண்மையான சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது. கோவா, குஜராத், சத்தீஸ்கர், ஹரியானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்றிருக்கிறோம். இப்பட்டியலில் தற்போது மகாராஷ்டிராவும் இணைந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் மக்கள் வளர்ச்சியை விரும்புவது தெளிவாகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். பாஜக தேசிய தலைவர் நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘பெரியார் என்ன சமூகநீதி செய்தார்… பெண்ணுரிமை பேச பிரபாகரனுக்கு மட்டுமே தகுதி இருக்கிறது’- சீமான்

Pagetamil

5 ஆண்டுகளில் 64 பேரால் பாலியல் வன்கொடுமை: காதலனின் துரோகம் மாணவியின் வாழ்வை சிதைத்த கொடூரம்

east tamil

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை: தமிழக சட்டப்பேரவையில் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்

Pagetamil

“நாம் தமிழர் கட்சியை கலைத்துவிட்டு சீமான் பாஜகவில் சேர வேண்டும்” – மாணிக்கம் தாகூர் எம்.பி.

Pagetamil

ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் கோகி உயிரிழப்பு: தற்செயலாக தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக போலீஸ் தகவல்

Pagetamil

Leave a Comment