கொழும்பு சர்வதேச பாடசாலையின் மாணவி ஒருவரின் மரணம் தொடர்பான விசாரணையில், அல்டேர் சொகுசு குடியிருப்பில் இருந்து குதித்து இரண்டு பாடசாலை நண்பர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துடன் தொடர்புடையதென தெரியவந்துள்ளது. .
கொள்ளுப்பிட்டியை சேர்ந்த மாணவி நேற்று மாலை கொழும்பு தாமரைக் கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரின் விசாரணைகளின்படி உயிரிழந்தவர் கொழும்பு சர்வதேச பாடசாலையில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஆவார். பாடசாலை பையில் வேறு உடைகளையும் எடுத்து சென்றவர், பாடசாலை முடிந்ததும், தாமரை கோபுரத்தை பார்வையிட நுழைந்து, தரைத்தளத்தில் உள்ள பெண்கள் குளியலறையில் உடை மாற்றியுள்ளார். பின்னர், 29வது மாடிக்கு சென்றார்.
அங்கு பாதுகாவலர்கள் இருந்த போதும், அவர்களின் பார்வையிலிருந்து தப்பித்து, புத்தகப்பை மற்றும் காலணியை கழற்றி வைத்து விட்டு, மாடியிலிருந்து குதித்துள்ளார். இது சிசிரிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
இந்த ஆண்டு ஜூலை மாதம் அல்டேர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கொழும்பு சர்வதேச பாடசாலையின் மாணவி, மாணவன் குதித்து தற்கொலை செய்து கொண்டிருந்தனர். அவர்களும், தற்போது உயிரிழந்த மாணவியும் நெருங்கிய நண்பர்கள்.
அல்டேர் சம்பவத்தைத் தொடர்ந்து தனது மகள் கணிசமான மன அழுத்தத்தில் இருந்ததாக சிறுமியின் தந்தை நேற்று பொலிசாருக்கு தகவல் கொடுத்தார். உயிரிழந்த இரண்டு மாணவர்களின் 3வது மாத நினைவு நிகழ்விலும் சில நாட்களின் முன் கலந்து கொண்டுள்ளார்.
பின்னர், அந்த மாணவர்களின் பாணியிலேயே செயற்பட்டு, உயரமான கோபுரத்திலிருந்து குதித்து உயிரை மாய்த்துள்ளார்.
மருதானை பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.