சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தினசரி விமான சேவை அதிகரித்துளள நிலையில், மதுரையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமான சேவையை தொடங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
யாழ்ப்பாணம், பலாலி விமான தளத்துக்கு சென்னை மற்றும் தென்னிந்திய நகரங்களில் இருந்து நடந்து வந்த விமான சேவை 1983ல் உள்நாட்டுப் போரால் நிறுத்தப்பட்டது. 1990ல் இலங்கை இராணுவத்தால் பலாலி விமான தளத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் அபகரிக்கப்பட்டு அங்கு வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்தப் பின்னர் பலாலி விமானத்தளமானது இந்தியாவின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்டு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 17.10.2019ல் யாழ்ப்பாணம் விமான நிலையம் திறக்கப்பட்டது.
முதற்கட்டமாகச் சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு பயணிகள் விமானத்தை அலையன்ஸ் ஏர் நிறுவனம் வாரத்திற்கு மூன்று நாட்கள் இயக்கியது. ஆனால் ஐந்தே மாதங்களில் கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2020 மார்ச்சில் யாழ்ப்பாணம் விமான நிலையம் மூடப்பட்டது. பின்னர் 34 மாதங்கள் கழித்து 2022 டிசம்பரில் மீண்டும் சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு பயணிகள் விமான சேவையை மீண்டும் அலையன்ஸ் ஏர் நிறுவனம் தொடங்கியது. வாரத்திற்கு மூன்று நாட்கள் இயக்கப்பட்ட விமான சேவையும் தினசரி சேவையாக அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில் செப்டம்பர் 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தினசரி விமான சேவையை தொடங்கி உள்ளது. இந்த விமானம் 52 பயணிகளுடன் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3.07 மணியளவில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தது.
சென்னை – யாழ்ப்பாணம் இடையே விமான சேவை குறுகிய காலக்கட்டத்திலேயே நல்ல வரவேற்வை பெற்றுள்ளதால், மதுரையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்குவதற்கு இலங்கை விமான சேவை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக இந்தியாவிலிலுள்ள தனியார் விமான சேவை நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, வாரத்திற்கு ஏழு நாட்களும் விமான சேவையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரை – கொழும்பு இடையே முதல் சர்வதேச விமான சேவை கடந்த செப்டம்பர் 2012ல் தொடங்கப்பட்டது. தற்போது மதுரையிலிருந்து கொழும்புக்கு நேரடி விமான சேவையை இன்டிகோ ஏர்லைன்ஸ் (தினசரி) மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.