ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பல்டியடித்த நாடாளுமன்ற உறுப்பினர் சியாட் அலி சாஹிர் மௌலானாவை கட்சியிலிருந்து நீக்குவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அதன் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் ஆகியோருக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை அமுலுக்கு வரும் வகையில் கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி சந்துன் விதான இந்த உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், அன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முறையான நடைமுறைகளை பின்பற்றாமல் கட்சியின் உறுப்புரிமையை இரத்துச் செய்து தமக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துவதற்கு கட்சியின் தலைவர்கள் செயற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சியாத் அலி சாஹிர் மௌலானா தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த மாவட்ட நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.
சட்டத்தரணி சனத் விஜேவர்தனவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சந்தக ஜயசுந்தர ஆஜராகியிருந்தார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதென, கட்சியின் தீர்மானத்தை மீறி அவர் முடிவெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.