வவுனியா – மன்னார் வீதியில் நோயாளர் காவு வண்டியில் பெண் வைத்தியர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டதாகவும், நோயாளர் காவு வண்டி சாரதி மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் போலிச் செய்தியொன்று பரவி வருகிறது.
தவறான புரிதல் காரணமாக இளம் பெண் வைத்தியர் ஒருவர் நோயாளர் காவு வண்டியிலிருந்து குதித்ததே இந்த போலிச் செய்தி பரவ காரணமாக அமைந்தது.
வவுனியா வைத்தியாசாலையில் இருந்து பம்பைமடு பகுதியில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டியில் உணவு கொண்டு சென்றுள்ளனர். சாரதியும் இன்னுமொருவரும் நோயாளர் காவு வண்டியில் சென்றுள்ளனர்
குறித்த உணவை வழங்கிவிட்டு நோயாளா் காவு வண்டி வவுனியா நோக்கி வந்த போது வீதியில் நின்ற சிங்கள இளம் பெண் வைத்தியர் ஒருவர் குறித்த நோயாளர் காவு வண்டியில் மறித்து ஏறியுள்ளார்.
குறித்த ஆயுர்வேத பெண் வைத்தியரை ஏற்றிக் கொண்டு வவுனியா நோக்கி சென்ற நோயாளர் காவு வண்டி வேப்பங்குளம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை நிரப்பி விட்டு, மீண்டும் மன்னார் வீதி ஊடாக பம்பைமடு நோக்கி புறப்பட்ட நிலையில், தூரத்தை மீதப்படுத்தும் நோக்கத்தில் குறுக்கு வீதியொன்றினால் பயணித்துள்ளது.
இதனால் அச்சமடைந்த இளம் பெண் வைத்தியர், நோயாளர் காவு வண்டி கதவை திறந்து கீழே குதித்துள்ளார். இதனால் அவர் காலில் சிறிய காயமடைந்தார்.
வைத்தியர் கீழே குதித்ததால் அங்கு பொதுமக்கள் கூடி, பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு கூடிய மக்களிடம் தன்னை கடத்திச் செல்ல முற்பட்டதாக பெண் வைத்தியர் தெரிவித்ததையடுத்து, நெளுக்குளம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்ட போது, வைத்தியருக்கு ஏற்பட்ட தவறான புரிதலால் இந்த அனர்த்தம் நிகழ்ந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, இளம் பெண் வைத்தியர் நிலவரத்தை புரிந்து கொண்டார். அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.