எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி சார்பிலும் வேட்பாளர் ஒருவரை களமிறக்கவுள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்) கட்சி, தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.
தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்க வசதியாக இந்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பில் கலந்துரையாடல்கள் நடந்து வருகின்றன. இதுவரை வேட்பாளர் தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.
இலங்கை தமிழ் அரசு கட்சியை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன், அதே கட்சியின் கொழும்புக்கிளை தலைவர் கே.வி.தவராசா ஆகியோரின் பெயர்கள் இறுதிப்பரிந்துரையில் உள்ளன.
பொதுவேட்பாளருக்காக முயற்சிக்கும் 7 தனிநபர்கள், 7 சிறு கட்சிகளில் ஒவ்வொரு பகுதியினர் இருவரையும் ஆதரிக்கிறார்கள்.
அரியநேந்திரன் போட்டியிடுவதெனில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்க முடியும்.
கே.வி.தவராசா போட்டியிடுவதெனில் ஏதாவதொரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளராகவே களமிறங்க முடியும். எனினும், பொதுவேட்பாளரை ஆதரிக்கும் குழுவிலுள்ள தமிழ் மக்கள் கூட்டணி, ரெலோ, புளொட் என்பன தமது கட்சியின் ஊடாக வேட்பாளர் களமிறக்கப்படுவதை விரும்பவில்லை. இதற்கு, பொதுவேட்பாளர் ஏற்பாட்டுக்குழு தயாரித்த யாப்பிலுள்ள- அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாது என்ற நிபந்தனையும் ஒரு காரணம்.
இந்த சூழலில், பொதுவேட்பாளரை களமிறக்க வசதியாக ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பினர் தமது அரசியல் குழுவை கூட்டி முடிவெடுத்துள்ளனர். அரசியல் குழுவின் முடிவின்படி, அடுத்த தேர்தலில் தமது கட்சியின் சார்பில் வேட்பாளரை களமிறக்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளனர்.