தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விபத்தில் சிக்கியதை தொடர்ந்து, வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரிடமிருந்து அவர் விடுபடுவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தலையீடு தேவையாக இருந்த விவகாரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று முன்தினம் (30) கொழும்பிலிருந்து கல்முனை நீதிவான் நீதிமன்ற வழக்கிற்கு எம்.ஏ.சுமந்திரன் பயணித்த போது, அதிவேக நெடுஞ்சாலையில் அவரது வாகனம் விபத்திற்குள்ளானது.
இதை தொடர்ந்து அதிவேக நெடுஞ்சாலைக்க பொறுப்பான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று, எம்.ஏ.சுமந்திரனை தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கவில்லை.
விபத்தினால் ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டை வழங்க வேண்டுமென அவரகள் விடாப்பிடியாக நின்றுள்ளனர். எம்.ஏ.சுமந்திரனின் வாகனம் வழுக்கி விபத்திற்குள்ளான அதே இடத்தில் பின்னால் வந்த வாகனமும் வழுக்கி விபத்திற்குள்ளானதை சுட்டிக்காட்டிய எம்.ஏ.சுமந்திரன், அது அதிவேக வீதியில் உள்ள கோளாறு என்பதை சுட்டிக்காட்டினார்.
எனினும், குறிப்பிட்ட அதிகாரி அதை செவிமடுக்கவில்லை. எம்.ஏ.சுமந்திரனை தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கவில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி என்பதால் அவரை வேண்டுமென்றே வழிமறித்து நீ்ண்டநேரம் தாமதித்தாரா என்ற சந்தேகம், சுமந்திரன் தரப்பினருக்கு ஏற்படும் விதமாக அந்த அதிகாரி நடந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அங்கிருந்து பயணத்தை தொடர்வதற்காக, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை தொலைபேசியில் தொடர்பு கொள்ள மயன்றார். எனினும், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதையடுத்து, மஹிந்த ராஜபக்சவிற்கு நெருக்கமான தமிழ் பத்திரிகையாளர் ஒருவரை சுமந்திரன் தொடர்பு கொண்டிருந்தார். அந்த பத்திரிகையாளர் மூலமாக, அழைப்பில் வந்த மஹிந்த ராஜபக்ச, சுமந்திரனின் நலன் விசாரித்து, அவரது பயணத்தை தொடர ஆவண செய்துள்ளார்.
இதற்கிடையில், மஹிந்த- சுமந்திரன் உரயாடல்களிற்குள் சம்பவத்தை அறிந்த ஜோன்ஸ்டன், சுமந்திரனின் பயணத்தை அனுமதிக்க உத்தரவிட்டார்.
எம்.ஏ.சுமந்திரனின் பயணத்தை தாமதப்படுத்திய குறிப்பிட்ட அதிகாரி மீது துறைசார்ந்த விசாரணை நடத்தப்படவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.