இந்த ஆண்டுக்கான தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு மாத்திரமே இந்தப் பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அத்துடன் விசேட வர்த்தமானி மூலம் விசாரணை ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள தேர்தல்களுக்கான திருத்தங்கள் இவ்வருடம் நடைபெறவுள்ள தேர்தலுக்கும் 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் கூறினார்.
அரசாங்கத்தின் தற்போதுள்ள வரையறுக்கப்பட்ட நிதியில், 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பான செலவுகளை அந்த ஏற்பாடுக்குள் நிர்வகிக்க வேண்டும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான நிதியை 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்தின் தற்போதுள்ள வரையறுக்கப்பட்ட நிதி இடத்தினுள் வழங்க வேண்டும் என அமைச்சரவை அவதானித்துள்ளது.
ஆணைக்குழு சட்டம் (அதிகாரம் 393) இன் கீழ் நிறுவப்பட்ட விசாரணை ஆணைக்குழு பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு தேவைப்பட்டால், 16-10-2023 திகதியிட்ட சிறப்பு வர்த்தமானி எண்.2354/06 மூலம் வெளியிடப்பட்ட தேர்தல் சட்டங்கள். நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் திருத்தங்கள் முன்வைக்கப்பட வேண்டுமென அமைச்சரவை மேலும் கவனத்தில் எடுத்துக் கொண்டது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
உள்ளூராட்சி, மாகாணசபை தேர்தல்களில் படுதோல்வியடையும் என்ற நிலைமை காரணமாக பெரமுன, ஐதேக கூட்டு இந்த தேர்தல்களை தொடர்ந்து பிற்போட்டு வருவதாக பரவலான அபிப்பிராயம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.