குருநாகல், வில்பாவ பகுதியில் உள்ள குன்றிலிருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (06) பிற்பகல் காட்டுப்பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த போது, பொலிஸாரின் திடீர் சோதனையின் காரணமாக அவர் தப்பிச் செல்லும்போது பாறை குன்றின் மீது விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
வில்பாவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய திருமணமாகாத ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று மதியம் பன்சல்வத்தை என்ற ஒதுக்குப் புறமான காட்டு பகுதியில் 3 பேருடன் சட்டவிரோத மது அருந்திக் கொண்டிருந்தார்.
அங்கு திடீரென பொலிசார் வந்ததால் பதற்றமடைந்தவர்கள் அங்கிருந்து ஓட முயன்றனர்.
அந்த இடத்தில் இருந்த 2 பேரை போலீஸ் காவலில் எடுத்ததுடன், 2 பேர் தப்பி ஓடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பொலிசார் சென்ற பின், மாலை 6 மணியளவில், வனப்பகுதியிலிருந்து ஒருவர் கூச்சல் போடும் சத்தம் கேட்டு, அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் முதியவர் ஒருவர் அங்கு சென்றபோது, பாறை அருகே ஒருவர் படுத்திருப்பதைக் கண்டார்.
பின்னர், அக்கம்பக்கத்தினர் இணைந்து, காயமடைந்தவரை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர்.
பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் தற்போது குருநாகல் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
சட்டவிரோத மதுபான கடத்தலுக்காக பொலிஸாரால் தேடப்பட்டு வரும் குறித்த நபர் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் காரணமாகவே தப்பிச் சென்றுள்ளதாக நம்பப்படுகின்றது.
அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பிறகு, அவருடன் மற்றொரு நபர் குன்றின் கீழே விழுந்ததாக அவர் கூறினார்.
அதன்படி விசாரணையில் இறந்த இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இவர்கள் மது அருந்திக் கொண்டிருந்த இடத்துக்கு அருகில் உள்ள பாரிய குன்றின் ஒன்றிலிருந்து தவறி விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
நீதவானின் விசாரணைகளின் பின்னர் சடலம் குருநாகல் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.