வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸிற்கு நீதி கேட்டு வட்டுக்கோட்டையில் இன்று (03) கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு செல்லும் வீதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு வீதித் தடைகள் அமைக்கப்பட்டிருந்தது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டைச் சந்தியில் பிற்பகல் 3 மணியளவில் போராட்டம் ஆரம்பமானது.
போராட்டம் ஆரம்பமான சிறிது நேரத்தில் பொலிஸார் நீதிமன்ற தடையுத்தரவை கொண்டுவந்து வாசிக்க முற்பட்டவேளை போராட்டகாரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே பொலிஸார் பின்வாங்கினர்.
அலெக்ஸ் அப்பாவி வட்டுக்கோட்டை பொலிஸ் குற்றவாளி, காவல்துறையா காவாலித் துறையா என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
போராட்டம் நடைபெற்றபோது பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் குவிக்கப்பட்டு போராட்டகாரர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டனர்.
நாகராசா அலெக்ஸின் மரணத்துக்கு நீதி கோரியும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்டு வரும் சட்ட விரோத சித்திரவதைகளை நிறுத்தக் கோரியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்ட நிறைவுபெறும் தறுவாயில் காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸார் கலந்துரையாட முன்வந்தபோதும் போராட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.