சாவகச்சேரி நகரத்திலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் மின்சாரம் தாக்கி உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நுணாவிலை சேர்ந்த நித்தியானந்தன் கஜலக்சன் (26) என்பவரே உயிரிழந்தார்.
நிதி நிறுவனம் அமைந்துள்ள கட்டிடத்தின் நீரிறைக்கும் மோட்டார் பழுதடைந்துள்ளது. அதை சரி செய்யும் பணி நடந்தது. நீர் இறைக்கும் மோட்டார் இயங்க தொடங்கியதும், தண்ணீர் தொட்டியின் நீர் அளவை பார்க்க சென்ற போதே, நிதி நிறுவன பணியாளர் மின் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளார்.
தண்ணீர் தொட்டி அமைந்துள்ள கட்டிடத்தின் பகுதியிலிருந்து சுமார் 2 அடி தூரத்தில் உயரழுத்த மின்மார்க்க இணைப்பு உள்ளது. இந்த தூரத்திற்குள் அவர் வந்தபோது, மின் அதிர்ச்சிக்குள்ளகி தூக்கி வீசப்பட்டுள்ளார். அப்போது, இரும்புக் கம்பியொன்று அவரது தலையை தாக்கி, படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதி உயர் மின்மார்க்க இணைப்பை 5அடிக்குள் நெருங்குபவர்கள், மின் இணைப்பை தொடாமலேயே மின் தாக்கத்துக்குள்ளாகுவார்கள். இதனாலேயே அதி உயர் மின்மார்க்கத்திலிருந்து 7 அடிக்கு அப்பாலேயே கட்டிடங்கள் அமைய வேண்டுமென விதிமுறைகள் உள்ளன. இருந்த போதும், யாழ்ப்பாணம், சாவகச்சேரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சட்டவிரோத கட்டிடங்கள் இந்த விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ளன.
சாவகச்சேரியில் அனர்த்தம் நிகழ்ந்த கட்டிடத்தின் மேல் பகுதி, அதி உயர் மின்மார்க்க இணைப்புக்கு நெருக்கமாக உள்ளதால், அது முறைப்படி அனுமதி பெற்று, விதிமுறைகளுக்கு அமைய கட்டப்பட்ட கட்டிடமா என்ற கேள்வியெழுந்துள்ளது.
இது தொடர்பில் சாவகச்சேரி பொலிசார் ஆராய்ந்து வருகிறார்கள்.
விதிமுறைகளுக்கு அமைய கட்டிடம் அமைக்கப்பட்டிருந்தால், இன்றைய உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம் என்பதே துறை சார்ந்தவர்களின் கருத்தாக உள்ளது.
விபத்து நிகழ்ந்த கட்டிடம் முறைப்படி அனுமதி பெற்றிருக்கவில்லையெனில், தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும், சட்டவிரோத கட்டிடங்கள் தொடர்பில் கண்ணை மூடிக் கொண்டிருந்து, சட்டவிரோத கட்டிடங்களுக்கு மறைமுகமாக ஒத்தாசை புரிந்த உள்ளூராட்சி நிர்வாகிகளும் பொறுப்பு கூற வைக்கப்பட வேண்டுமென்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.