பொகவந்தலாவ கிவ் தோட்டத்தில் ஒரே குடும்பத்தைச சேர்ந்த எட்டு பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி ஜெய்கணேஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனை முடிவிலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்றுக்குள்ளான குறித்த குடும்பத்தின் தந்தையுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தொற்றுக்குள்ளான தந்தை பொகவந்தலாவ மோரா தோட்ட தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் சிசிச்சை பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய 8 தொற்றாளர்களும் சித்திரை புத்தாண்டுக்காக கொழும்புக்கு சென்று வந்தவர்கள் என பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி ஜெய்கணேஸ் தெரிவித்துள்ளார்.
தொற்றாளர்களில் 4 மாத குழந்தை ஒன்றும் 7 வயது சிறுவன் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொற்றாளர்கள் வசிக்கும் வீடு மற்றும் அவர்கள் சென்று வந்த இடங்களும் தோட்ட நிர்வாகத்தால் கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக நுவரெலியா பொகவந்தலாவ கெர்கர்ஸ்வோல்ட் தோட்டத்திலும் ஒருவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி ஜெய்கணேஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொட்டகலை நகரிலும் பெண் ஒருவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனை முடிவிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் கொழும்பு பம்பலப்பிட்டி பகுதிக்கு சென்று வந்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
–க.கிஷாந்தன்-