இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மீது அபத்தமான குற்றச்சாட்டுக்களை சுமத்தாமல், தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் பொலிஸில் முறைப்பாடு செய்யலாம் என இலங்கை கிரிக்கெட்டின் பதில் செயலாளர் கிரிஷாந்த கபுவத்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற சிறப்புரிமைகள் என்ற போர்வையில் விளையாட்டுத்துறை அமைச்சர் தனது நிறுவனத்தை குற்றஞ்சாட்டி வருவதாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
மக்களை தவறாக வழிநடத்தும் இவ்வாறான கருத்துக்களால் நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை எனவும், கிரிக்கட்டை மீட்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் பதில் செயலாளர் தெரிவித்துள்ளார்.
குறுகிய அரசியல் நோக்கங்களை முன்வைத்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்காமல் தவறுகள் இருப்பின் பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறும், இது தொடர்பில் தேவையான சகல உதவிகளையும் வழங்குமாறும் கிரிஷாந்த கபுவத்த தெரிவித்தார்.
கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு எந்தவித அரசியல் தொடர்புகளும் இல்லை, குறுகிய அரசியல் பார்வைகளும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போட்டியில் வெற்றிபெறும்போது ஒளிந்துகொள்பவர்கள் அனைவரும் போட்டியில் தோற்றால் குற்றம் சுமத்த முன்வருகின்றனர் என கிரிக்கெட் நிறுவனத்தின் பதில் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் கிரிக்கெட்டை கட்டியெழுப்ப இன்றைய செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்காக விளையாட்டுத்துறை அமைச்சரையும் அழைக்கவுள்ளதாக கிரிக்கெட் நிறுவனத்தின் பதில் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் அதற்கான கலந்துரையாடலில் தலைவர் கலந்து கொள்வார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தடை காரணமாக இலங்கை அணி 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணப் போட்டிகளுக்குச் செல்ல முடியாது எனவும், எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தை அவர்கள் இழக்க நேரிடும் எனவும் கிரிஷாந்த கபுவத்த தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, இலங்கை கிரிக்கட் தலைவர் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பில் சர்வதேச விளையாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த செய்திகளை கோடிட்டுக் காட்டினார்.
இதற்கிடையில், இலங்கை கிரிக்கெட்டுக்கு தடை விதிக்கும் வகையில், கொழும்பில் உள்ள பிரதான ஹோட்டல் அறையொன்றில் சிலர் வெற்றிக் கொண்டாட்டம் நடத்தியதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். தற்போது தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட்டுக்கு தடை விதித்து சர்வதேச கிரிக்கட் பேரவை எடுத்த தீர்மானத்திற்கு எதிராக சர்வதேச கிரிக்கட் பேரவையில் மேன்முறையீடு செய்ய எதிர்பார்ப்பதாகவும் விளையாட்டு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.