திருகோணமலை இலுப்பைக்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பொரலுகந்த ரஜமகா விகாரை எனும் பெயர்ப்பலகை நடப்பட்டுள்ள பகுதியில் இரவு வேளைகளில் திருட்டுத்தனமாக விகாரை கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 25ஆம் திகதி இரவு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ் மக்கள் செறிந்து வாழும் இந்த பகுதியில் விகாரையின் கட்டுமானப் பணிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநரினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் திருட்டுத்தனமான முறையில் விகாரை கட்டப்பட்டு வருதாக மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இந்த பகுதியில் அண்மைக்காலத்தில் பௌத்தத்திற்கு மதம் மாறிய 2 குடும்பங்கள் மாத்திரமே உள்ளனர்.அவர்களும் விகாரை அமைக்கப்பட வேண்டுமென கோரவில்லை. ஆனால், அரச மரத்தை கண்டால் விகாரை, மண்மேட்டை கண்டால் தாதுகோபுரம் அமைக்கும் அண்மைக்கால பௌத்த ஆக்கிரமிப்பு நடைமுறையின்படி, அங்கு விகாரை கட்டும் பணிகள் ஆரம்பித்தது.
விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இம்மாதம் 3ஆம் திகதி மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதையடுத்து, பௌத்த பிக்குகளின் பெயர் குறிப்பிட்டு,விகாரை அமைக்க எத்தனித்த காணிக்குள் நுழைய தடைவிதித்து பிரதேச செயலாளர் அறிவித்தல் விடுத்திருந்தார்.
என்றாலும், பிக்குகள் சண்டித்தனத்தில் ஈடுபட்டு, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திற்குள் நுழைந்து, குழப்பத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, அரச காணிக்குள் நுழைய தடைவிதித்து பிரதேச செயலாளர் விடுத்த அறிவிப்பு விலக்கப்பட்டது.
9ஆம் திகதி காலை மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் குறித்த பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரை எனும் பெயர் பெயர்ப்பலகை நடப்பட்டிருந்தது.
தற்போது சிவில் பாதுகாப்பு படையினர் மூலம் இந்த திருட்டுத்தனமான கட்டுமானம் நடப்பதாக மக்கள் குற்றம்சாட்டினர்.
விகாரைக்கான பணிகளை இடைநிறுத்தக்கோரி ஆளுநரினால் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் திருட்டுத்தனமாக விகாரை கட்டப்படுகிறது. ஏற்கெனவே, முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நீதிமன்ற உத்தரவை மீறியே, சட்டவிரோத விகாரை அமைக்கப்பட்டது. அந்த சட்டவிரோத விகாரையை சட்டபூர்வ விகாரையாக அரச திணைக்களங்களும், அமைச்சும் அணுகுவது இலங்கை நிலைமையை புலப்படுத்துகிறது.