சிம்பாவே கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் ஹீத் ஸ்ட்ரீக் காலமானார். அவருக்கு வயது 49.
ஹீத் ஸ்ட்ரீக், சிம்பாவே அணிக்காக 1993 முதல் 2005 வரையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்த அணியின் கப்டனாகவும், பயிற்சியாளராகவும் பணியாற்றினார். சிம்பாவே அணிக்காக விளையாடிய வீரர்களில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய வீரராகவும் திகழ்ந்தார் ஹீத் ஸ்ட்ரீக்.
கடந்த மே மாதம் முதல் அவர் கல்லீரல் புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழந்தவிட்டதாக வதந்தி பரவிய நிலையில், அதனை அவரே மறுத்து அறிக்கை விட்டிருந்தார். தான் நலமுடன் இருப்பதாகவும், புற்றுநோயிலிருந்து மீண்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று (3) அதிகாலை ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழந்ததாக அவரது மனைவி நாடின் ஸ்ட்ரீக் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தனது பதிவில் அவர் கூறியிருப்பதாவது: “என் வாழ்க்கையின் மிகப்பெரிய அன்பும், என் அழகான குழந்தைகளின் தந்தையும், குடும்பம் மற்றும் நண்பர்களால் சூழ தனது கடைசி நாட்களைக் கழிக்க விரும்பிய தன்னுடைய வீட்டிலிருந்து தேவதூதர்களால் அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் அன்பு மற்றும் அமைதியால் சூழப்பட்டிருந்தார்” இவ்வாறு நாடின் குறிப்பிட்டுள்ளார்.
ஹீத் ஸ்ட்ரீக் மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.