காதலித்து நெருக்கமாக இருந்து விட்டு, திருமணம் செய்ய மறுத்த இளைஞனை கடத்திச் சென்று அடைத்து வைத்த சம்பவம் தொடர்பில் யுவதி ஒருவரும் மேலும் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று (05) காலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்தனர். வாத்துவ பிரதேசத்தில் வசிப்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (04) பிற்பகல் அலோபோமுல்ல பின்வத்த வீதியில் முச்சக்கர வண்டியில் வந்த யுவதியொருவர் மற்றும் மற்றுமொரு குழுவினரால் இந்த இளைஞன் கடத்திச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடத்தப்பட்ட இளைஞனும் யுவதியும் சில காலமாக காதலித்து வந்துள்ளனர். அவர்கள் நெருக்கமாக இருந்ததுடன், யுவதியிடமிருந்து பணத்தையும் இளைஞன் பெற்றிருந்தார். எனினும், தற்போது யுவதியை திருமணம் செய்து கொள்ள இளைஞன் மறுத்தமையினால் அவர் கடத்தப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் கடத்திச் செல்லப்பட்டு வெறிச்சோடிய வீடொன்றில் அடைத்து வைக்கப்பட்டு மீண்டும் விடுவிக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட யுவதி பாதுகாப்பு பிரிவில் பணிபுரிபவர் எனவும், கடத்தப்பட்ட இளைஞர் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிபவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் கடத்த வந்த முச்சக்கரவண்டி மற்றும் அதன் சாரதியை கண்டுபிடிக்க மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (05) பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.