யாழ்ப்பாணம், நல்லூர் வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தை பொதுமுகாமைத்துவம் ஒன்றினை அமைத்து நிர்வகிப்பது தொடர்பில் ஆராய எதிர்வரும் திங்கள்கிழமை நல்லூர் பிரதேச செயலாளர் கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வீரமாகாளி அம்மன் தேவஸ்தானம் 3 குடும்பங்களைச் சேர்ந்த பூசகர்களின் பராமரிப்பில் இருந்தது. எனினும், அவர்களிற்குள் நீண்டகாலமாக முரண்பாடு காணப்பட்டது. இவர்கள் மூவரும் தலா 10 நாட்கள் வீதம் திருவிழாவை நடத்தி வந்தனர். சுழற்சி முறையில் கோயில் கொடியேற்றத்தை ஆரம்பித்தனர்.
இந்த நிலையில், பூசகர் ஒருவர் அண்மையில் யாழ் மேல் நீதிமன்றத்தில் கோயில் உரிமை வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், இதுவரை உரிமையாளராக இருந்த பூசகர் ஒருவருக்கு உரித்தில்லையென குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில் அவருக்கு சார்பாக தீர்ப்பு வந்ததாக குறிப்பிட்ட வழக்கு தொடர்ந்தவர், தனக்கு 20 நாட்கள் திருவிழாவும், மற்றொருவருக்கு 10 நாள் திருவிழா என்றும் திட்டமிட்டார்.
கோயில் உரிமையிலிருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்பட்டவரே இம்முறை கொடியேற்றத்தை ஆரம்பிக்க வேண்டியவர். அவர் இம்முறை திருவிழாவுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சுழற்சிமுறையின்படி இம்முறை தான் கொடியேற்றத்தை செய்வதை யாரும் தடைசெய்யக்கூடாது என கேட்டிருந்தார். அவருக்கு சார்பாக மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இந்த நிலையில், கோயில் திருவிழா திட்டமிட்டபடி காலையில் தொடங்க முடியாமல், நீதிமன்றம் வரை மீண்டும் பிரச்சினை சென்று, மாலையில் திருவிழா ஆரம்பித்தது.
இந்த நிலையில் ஆலய மகோற்சவ உபயகார்கள், ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ளும் பொதுமக்கள் இணைந்து, வீரமாகாளி அம்மன் ஆலயத்தினை நிர்வகிப்பதற்கு என பொது முகாமைத்துவத்தினை அமைக்குமாறும் எதிர்வரும் ஆண்டுகளில் திருவிழாவினை தடையின்றி நடாத்துவதற்கு ஆவணை செய்யுமாறும் கோரி நல்லூர் பிரதேச செயலாளர் எழிலரசி அன்ரன் யோகநாயகத்திடம் மகஜர் கையளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தொடர்புடைய பூசகர் குடும்பங்களை 26ஆம் திகதி காலையில் கலந்துரையாடலுக்கு வருமாறு நல்லூர் பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.