யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பெண்கள் பாடசாலைகளில் வகுப்பு ரீதியாக வட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு மாணவிகளின் பெற்றோரின் கைபேசி இலக்கங்கள் இணைக்கப்பட்டு வகுப்பு ஆசிரியைகளால் கையாளப்பட வேண்டும் என்றும், மாணவிகள் தொடர்பான அவதானிப்புக்கள் அதில் பதிவிடப்பட வேண்டும் என்றும் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரினால் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் நேற்று இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் பதின்ம வயதினர் தொடர்பான குற்றங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மாணவிகளின் வரவு உட்பட அவர்கள் தொடர்பான ஆசிரியர்களின் அவதானிப்புக்களை மாணவிகளின் பெற்றோர், பாதுகாவலர் பார்க்கும் வகையில் வட்ஸ் அப் குழுக்களை உருவாக்க வேண்டும் என்றும், இந்தக் குழுக்கள் வகுப்பு ஆசிரியைகளாலேயே கையாளப்பட வேண்டும் என்றும் பணிக்கப்பட்டுள்ளது.
மாணவிகள் பாடசாலைக்கு சமூகமளிக்காவிட்டால் உடனடியாக இந்தக் குழுக்கள் ஊடாக பெற்றோருக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும், மாணவிகள் பாடசாலைக்கு வரும் வாகன விவரங்கள், சாரதிகளின் கைபேசி இலக்கங்கள் போன்றவையும் இந்தக் குழுக்களில் பகிரப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் குறித்த செயற் திட்டம் அந்தந்த பொலிஸ் பிரிவில் உள்ள பொலிஸ் பொறுப்ப திகாரிகளினால் மேற்பார்வை செய்யப்படும் எனவும் யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் பெண்கள் பாடசாலை அதிபர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.