தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் சர்ச்சைக்குரிய அதிபர் விடுதி பாடசாலைக்கே உரியது, அதில் அத்துமீறி குடியிருக்கும் மதப் பிரிவினர் இனி அதற்குள் நுழையக்கூடாது என மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க மிசன் தேவாலயத்தினால் உருவாக்கப்பட்ட தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் அதிபர் விடுதியை, சில வருடங்களின் முன்னர் தென்னிந்திய திருச்சபையிலிருந்து பிரிந்த இலங்கை அமெரிக்கன் மிசன் தேவாலயம் என்ற மதப்பிரிவினர் உள்நுழைந்து உரிமை கொண்டாடி வருகிறார்கள்.
அதன்மூல உறுதியை கொண்டுள்ள தென்னிந்திய திருச்சபையும் அதற்கு எதிராக குரல் கொடுத்தது.
பாடசாலை நிர்வாகத்திற்கும், இலங்கை அமெரிக்கன் மிசன் தேவாலயத்திற்குமிடையில் ஏற்பட்ட இழுபறியை தொடர்ந்து, அந்த அதிபர் விடுதி பாடசாலை சமூகத்திற்குரியதென பிரதேச செயலாளர், நில அளவையாளர், கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்திருந்தனர்.
எனினும், விடுதிக்குள் யாரும் உள்நுழைய முடியாபடி, மத பிரிவினர் தடையேற்படுத்தியிருந்தனர்.
அண்மையில் பாடசாலை மாணவர்கள் அந்த வளாகத்திற்குள் சைக்கிளை நிறுத்த முயன்ற போது மதப்பிரிவை சேர்ந்த குழுவினரால் தாக்கப்பட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பில் பொலிசாரால் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பாடசாலை அதிபர், மாணவர்களின் இரண்டு பெற்றோர், இரண்டு மத குருமார், மூப்பரான பெண்மணி ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
பாடசாலை சமூகம் சார்பில் சட்டத்தரணி வி.திருக்குமரன் முன்னிலையாகினார். பாடசாலை சமூகம் தன்னிடமுள்ள காணி ஆதாரங்கள், அதிபர் விடுதியை பாடசாலைக்கு வழங்கிய வர்த்தமானி உள்ளிட்ட ஆதாரங்களை சமர்ப்பித்தது.
மத பிரிவினரும் தம்மிடமிருந்த ஆதாரங்களை சமர்ப்பித்தனர்.
இரு தரப்பு விளக்கங்களையும் ஆராய்ந்த நீதிமன்றம், பாடசாலையின் அதிபர் விடுதியை பாடசாலை சமூகமே பாவிக்க வேண்டுமென்று உத்தரவிட்டார். மத பிரிவினர் அந்த வளாகத்திற்குள் நுழையக்கூடாதென்றும் தடைவிதித்தார்.
பாடசாலை சமூகத்தினரை அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவித்தார்.
மத பிரிவினரை தலை 5 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.