நேட்டோ 700 கூடுதல் துருப்புக்களை வடக்கு கொசோவோவிற்கு அனுப்புகிறது. அதன் அமைதி காக்கும் படையினரில் 30 பேர் செர்பிய இன எதிர்ப்பாளர்களுடனான மோதல்களில் காயமடைந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செவ்வாயன்று நோர்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோருடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர், ஒஸ்லோவில் செய்தியாளர்களிடம் நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கூறுகையில், “மேற்கு பால்கனுக்கான செயல்பாட்டு இருப்புப் படையில் இருந்து மேலும் 700 துருப்புக்களை அனுப்ப முடிவு செய்துள்ளோம். கூடுதலான ரிசர்வ் படைகளை அதிக தயார்நிலையில் வைப்போம். தேவைப்பட்டால் அவர்களும் அனுப்பப்படலாம்” என்று அவர் கூறினார்.
கொசோவோவில் நேட்டோ தலைமையிலான அமைதி காக்கும் பணியில் தற்போது கிட்டத்தட்ட 3,800 துருப்புக்கள் ஈடுபட்டுள்ளன.
அல்பேனியர்கள் செர்பியாவின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்தபோது 1998 இல் கொசோவோவில் மோதல் வெடித்தது. இதையடுத்து செர்பியர்கள் மிருகத்தனமான ஒடுக்குமுறையுடன் பதிலளித்தனர். சுமார் 13,000 பேர், பெரும்பாலும் அல்பேனிய இனத்தவர்கள் இறந்தனர்.
1999 இல் நேட்டோவின் இராணுவத் தலையீட்டையடுத்து, கொசோவா பிரதேசத்திலிருந்து செர்பியாவை வெளியேற்றியது. இதை தொடர்ந்து, அங்கு அமைதி காக்கும் படையினர் நிலை கொண்டுள்ளனர்.
கொசோவோவின் 2008 சுதந்திரப் பிரகடனத்தை அங்கீகரிக்க செர்பியா மறுத்துவிட்டது. கொசோவாவில் அல்பேனிய இனத்தவர் மக்கள்தொகையில் பெரும்பகுதியைக் கொண்டுள்ளனர், ஆனால் கொசோவோ நாட்டின் வடக்கில் செர்பியாவை ஒட்டிய செர்பிய சிறுபான்மையினரைக் கொண்டுள்ளது.
கடந்த வார இறுதியில், கொசோவாவில் செர்பியர்கள் அதிகம் வாழும் பகுதி நகராட்சி கட்டிடங்களுக்குள் அல்பேனிய இன அதிகாரிகள் நுழைந்ததை அடுத்து, சமீபத்திய பதட்டங்கள் அதிகரித்தன. செர்பிய எதிர்ப்பாளர்கள் அவர்களைத் தடுக்க முயன்றபோது, கொசோவோ போலீசார் கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
பதிலுக்கு, செர்பியா நாட்டின் இராணுவத்தை மிக உயர்ந்த எச்சரிக்கை நிலையில் வைத்து கொசோவோவின் எல்லைக்கு மேலும் துருப்புக்களை அனுப்பியது. திங்களன்று செர்பியர்கள் மீண்டும் எதிர்ப்புத் தெரிவித்தனர், அல்பேனிய மேயர்களும் கொசோவோ காவல்துறையும் வடக்கு கொசோவோவை விட்டு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல், கொசோவோ மற்றும் செர்பியாவின் தலைவர்களை உடனடியாக பதட்டங்களைத் தணிக்குமாறு வலியுறுத்தினார், மோதல்கள் “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்று கூறினார்.
அவர் கொசோவோவின் பிரதம மந்திரி அல்பின் குர்தி மற்றும் செர்பிய ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக் ஆகியோரிடம் பேசி, “மேலும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையை” தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.