கர்நாடகாவின் 32 அமைச்சர்களில் 31 பேர் கோடீஸ்வரர்கள் எனவும், 24 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
டெல்லியை சேர்ந்த ஜனநாயக மாற்றத்துக்கான அமைப்பு கர்நாடக தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டபோது தெரிவிக்கப்பட்ட விவரங்களைக் கொண்டு ஆய்வு செய்தது. அதில் கர்நாடக அமைச்சரவை குறித்த முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளன. அந்த அமைப்பு நேற்று வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகிய இருவரை தவிர்த்து அமைச்சரவையில் 32 பேர் உள்ளனர். இதில் லட்சுமி ஹெம்பல்கர் என்ற ஒரே ஒரு பெண் மட்டுமே இடம்பெற்றுள்ளார். 32 அமைச்சர்களில் 24 பேர் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
32 அமைச்சர்களில் 31 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். கலால்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திம்மாப்பூர் ராமப்பா மட்டுமே கோடீஸ்வர் இல்லை. அவரது சொத்து மதிப்பு 58.56 லட்சம் ஆகும். அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஒரே பெண் அமைச்சரான லட்சுமி ஹெம்பல்கருக்கு ரூ.13 கோடிக்கு சொத்துகள் இருக்கின்றன. கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு ரூ.1,413.80 கோடி சொத்துகள் உள்ளன. அமைச்சரவையில் இவருக்கு அதிக அளவில் சொத்துகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி தகுதியைப் பொறுத்த வரையில், 6 அமைச்சர்கள் 8-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார்கள். 24 அமைச்சர்கள் இளங்கலை மற்றும் முதுகலை படித்துள்ளனர். 2 அமைச்சர்கள் டிப்ளமோ படித்துள்ளனர். வயதை பொறுத்தவரை 18 அமைச்சர்களின் வயது 41 முதல் 60 வயதுக்குள் உள்ளது. 14 பேர் 61 முதல் 80 வயது உடையவர்கள்.
இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.