ஆண்கள் பெண்களின் உடம்பை கவர்ச்சிகரமான ஒன்றாகப் பார்க்கிறார்கள். அதனால் நான் அதை பணம் சம்பாதிக்கப் பயன்படுத்துகிறேன். அப்படியிருக்க, நான் கவர்ச்சியாக உடுத்துகிறேன் என ஏன் ஆண்கள் கொதிப்படைகிறார்கள் என்பதே புரியவில்லையென தெரிலித்துள்ளார் உர்ஃபி ஜாவேத்
இந்தி சீரியல்களில் நடித்து வந்த உர்ஃபி ஜாவேத் கடந்த 2021ஆம் ஆண்டு ஓ.டி.டி தளத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் 1இல் கலந்துகொண்டு பிரபலமானவர்.
பிக் பாஸிலிருந்து ஒரே வாரத்தில் வெளியேற்றப்பட்ட நிலையில், தொடர்ந்து கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். இப்படிக் கவர்ச்சியான உடைகளை அணிவதால் பலரது விமர்சனங்களுக்கும், ட்ரோல்களுக்கும் உர்ஃபி ஜாவேத் ஆளாகி வருகிறார்.
இந்நிலையில் தன் மீது கோபப்பட ஆண்களுக்கு உரிமை இல்லை என்று உர்ஃபி ஜாவேத் பேசியிருக்கிறார்.
இதுதொடர்பாக பேசிய உர்ஃபி ஜாவேத், “என் மீது கோபப்பட்டு என்னை விமர்சிக்க ஆண்களுக்கு உரிமையில்லை என்று நினைக்கிறேன். நான் என் வாழ்க்கையில் அனுபவித்த கஷ்டங்களை நீங்கள் அனுபவித்தது இல்லை. கவர்ச்சியான ஆடைகளை அணிவது மட்டுமே என்னுடைய புகழிற்கு காரணம் என்று நான் நினைக்கவில்லை. எனது உடலையையும் கலையையும் ஒரு குறிப்பிட்ட விதத்தில் காண்பிப்பதில் எனக்கு எந்தவித பிரச்னையும், தயக்கமும் இல்லை.
ஆனால் நீங்கள் ஏன் கோபப்படுகிறீர்கள் அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று எனக்கு புரியவில்லை. ஒரு சில படங்களில் வரும் குத்துப் பாடல்களில் ஆடும் பெண்ணை அனைவரும் குறை கூறுகிறீர்களே தவிர அவ்வாறு நடிக்க உதவும் அப்படத்தின் இயக்குநரையோ, தயாரிப்பாளரையோ குறை சொல்வதில்லை. எப்போதும் பெண்களே குற்றம் சாட்டப்படுகிறார்கள். ஆண்கள் பெண்களின் உடம்பை கவர்ச்சிகரமான ஒன்றாகப் பார்க்கிறார்கள். அதனால் நான் அதை பணம் சம்பாதிக்கப் பயன்படுத்துகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.