“மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறேன்” என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஆகஸ்ட் 16 1947’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், “மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. அடுத்ததாக கமல் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறேன்.
இந்த ஆண்டு இறுதிக்குள் ‘மாவீரன்’ திரைப்படம் திரைக்கு வரும். அது தான் என்னுடைய அடுத்த ரிலீஸ். மாவீரன் படத்தின் கதைக்களம் எனக்கு மிகவும் புதிதாகவும் சவாலாகவும் இருந்தது. என்னுடைய நடிப்பில் ரஜினியின் சாயல் இருக்கும். அது திட்டமிட்டு வருவதில்லை. இயல்பாகவே வந்துவிடுகிறது.
நம்முடைய குறும்படம் ஒன்றுக்கு ஆஸ்கர் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆஸ்கர் என்பது நமக்கு வெறும் செய்தியாக இருந்தது. அதனை நிஜமாக்கியது ஏ.ஆர்.ரஹ்மான். அதைத் தொடர்ந்து வாய்ப்புகள் நிறைய இருக்கிறது, நாமும் சாதிக்க முடியும் என யோசிக்கும்போது பெரிய உத்வேகமாக இந்த விருது அமைந்துள்ளது” என்றார்.