முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆஸ்தான ஜோதிடரான ஞானா அக்காவின் மகள் வீட்டில் 8 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தங்கம் மற்றும் பணம் திருடப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அனுராதபுரத்திலுள்ள அவர்களது வீட்டில் இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது. ஞானா அக்காவின் மகளின் கணவர் அனுராதபுரம் தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
தனது வீட்டின் அறையொன்றில் இருந்த அலமாரியில் இருந்து 650,000 ரூபாயுடன், தங்கப் பொருட்களும் திருடப்பட்டுள்ளதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். திருடப்பட்ட பணம் மற்றும் தங்கப் பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.8,050,000 ஆகும்.
இம்மாதம் 23ஆம் திகதி தனது நண்பரின் திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக தானும் தனது மனைவியும் கொழும்பு செல்லவிருந்ததாகவும், திங்கட்கிழமை மாலை (20) மனைவி அலமாரியை சோதனையிட்ட போது அவற்றை காணவில்லையென தெரிய வந்ததாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் தனது மனைவி கலந்துகொண்டதாகவும், அன்றைய தினம் இந்த தங்கப் பொருட்கள் சில அலமாரியில் இருந்து எடுக்கப்பட்டதாகவும் முறைப்பாட்டாளர் பொலிஸில் தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த மார்ச் மாதம் 2ஆம் திகதிக்கும் 20ஆம் திகதிக்கும் இடைப்பட்ட ஒரு நாளில் இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீட்டில் இருந்த வேலைக்காரப் பெண் பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பலாங்கொடையில் உள்ள தனது வீட்டுக்குச் செல்வதாக கூறிச் சென்ற பெண், அதன் பின் பணிக்கு திரும்பவில்லை.
அநுராதபுரத்தை விட்டு வெளியேறிய பின்னர் அவர் தனது பலாங்கொடை வீட்டிற்குச் செல்லவில்லை என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.