உலகின் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச்சின் தொடர் வெற்றிகளுக்கு டுபாய் டென்னிஸ் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் முற்றுப்புள்ளி வைத்தார் 7ஆம் நிலை வீரரான ரஷ்யாவின் டானியல் மேத்வதேவ்.
டூட்டி ஃப்ரீ டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரில் டுபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 7ஆம் நிலை வீரரான ரஷ்யாவின் டானியல் மேத்வதேவை எதிர்த்து விளையாடினார். ஒரு மணி நேரம் 35 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டானியல் மேத்வதேவ் 6-4, 6-4 என்ற நேர் செட்டில் ஜோகோவிச்சை தோற்கடித்தார்.
இதன் மூலம் இந்த சீசனில் தொடர்ச்சியாக 15 வெற்றிகளை குவித்திருந்த ஜோகோவிச்சின் வெற்றிவேட்டைக்கு மேத்வதேவ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதேவேளையில் மேத்வதேவ் இந்த சீசனில் தொடர்ச்சியான 13வது வெற்றியை பதிவு செய்துள்ளார். 3 வார காலத்தில் இந்த வெற்றிகளை பெற்றுள்ள மேத்வதேவ், டுபாய் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியனான சகநாட்டைச் சேர்ந்த ஆந்த்ரே ரூப்லேவுடன் மோதுகிறார்.
ஜோகோவிச்சை வீழ்த்தியது குறித்து டேனியல் மேத்வதேவ் கூறும்போது, ‘‘ஒவ்வொரு முறையும் ஜோகோவிச்சை நான் வீழ்த்தும் போது சிறப்பான உணர்வு ஏற்படுகிறது. இது கூடுதல் நம்பிக்கையையும் கொடுக்கிறது. ஏனெனில், அவர் அனைத்து காலத்திலும் சிறந்த வீரர். ஜோகோவிச்சை வீழ்த்த முடியும் போது என்னால் எந்த வீரரையும் நிச்சயமாக தோற்கடிக்க முடியும்’’ என்றார்.