டெல்லியில் நடைபெற்று வரும் ஆளும் ஆம் ஆத்மி அரசின் மதுபான கொள்கையில் ரூ. 100 கோடி வரை ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த ஊழல் பணம், பல்வேறு கட்சி தலைவர்களின் கை மாறியதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதனால், இவ்வழக்கு குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி,டெல்லி அமைச்சரான சத்யேந்திரஜெயினின் தொடர்பு இருப்பதை அறிந்தனர். இதனை தொடர்ந்து, அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக தொடர்ந்து நடத்திய விசாரணையில், டெல்லியில் தொழிலதிபர் அமித் அரோரா கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில், அமித் அரோரா தனது வாக்குமூலத்தில் ‘சவுத் குரூப்’ என்கிற நிறுவனம் மூலம் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பலருக்கு லஞ்சம் வழங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சவுத் குரூப் நிறுவனம், தெலங்கானா முதல்வர் கவிதா, அருண் பிள்ளை, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்பி மாகுண்டா ஸ்ரீநிவாஸ் ரெட்டியின் மகன் ராகவ் மாகுண்டா, சரத் ரெட்டி, அபிஷேக் மற்றும் புச்சிபாபு ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதன் காரணமாக தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவின் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது. விரைவில் கவிதாவை சிபிஐ மற்றும் அமலாக்க துறையினர் நேரில் அழைத்து விசாரணை நடத்த உள்ளனர். ஏற்கனவே கவிதாவை விசாரணைக்கு வருமாறு சிபிஐ நோட்டீஸ் பிறப்பித்திருந்தது.
ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. தன்னை வீட்டில் வந்து விசாரிக்க வேண்டுமென கோரியிருந்தார்.
இந்நிலையில், தெலங்கானா மாநில பாஜக மூத்த நிர்வாகி விவேக் கூறியிருப்பதாவது: டெல்லி மதுபான கொள்கை ஊழலில் சவுத் குரூப் நிறுவனத்தில் 65% பங்கு கவிதாவுக்கு உள்ளது. இவர், இதற்கு முன் நடந்த பஞ்சாப், குஜராத் மாநில தேர்தலின்போது ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ. 150 கோடி பண உதவி செய்துள்ளார்.
விரைவில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அவரது மகள் கவிதா கைது செய்யப்படுவார். இவ்வாறு அவர் கூறினார். அவரது பேச்சு தெலங்கானா அரசியலில் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது.