யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் வடக்கு கிழக்கை நாங்கள் வெற்றி கொண்டுள்ளோம் என்று புகையிலை நிறுவனங்கள் கூறியிருந்தன. அதாவது முதல் இருந்த சந்தை வாய்ப்பை விட தற்போது அதிகளவிலான சந்தை வாய்ப்புகள் தற்போது கிடைத்துள்ளது என்று கூறியிருந்ததாக போதைப்பொருள் எதிர்ப்பு கூட்டமைப்பினர் தெரிவாத்தனர்.
யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
அங்கு அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
புதிதாக கிடைத்த இந்த சந்தை வாய்ப்பில் 5.1 பில்லியன் ரூபா வருமானமாக கிடைத்ததாக 2010ம் ஆண்டு அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். யுத்தம் முடிந்த பின்னர் புகையிலை நிறுவனங்கள் தந்திரோபாயங்களை மேற்கொண்டு இளைஞர்களை அதை புகைப்பதற்கு பழக்கினார்கள்.
இலங்கை நாட்டை பொறுத்தவரை பாரிய பொருளாதார நெருக்கடியால் அனைவருக்கும் பிரச்சினை இருக்கிறது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடாத்துவதற்கு கூட எங்களது நாட்டில் பணமில்லை.
இவ்வாறு இருக்கையில் சிகரெட் வரிக் கொள்கையை நாங்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்றால் முதலாவதாக விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். அதாவது சிகரெட்டுக்கான வரிக் கொள்கையை சரியான முறையில் அமுல்படுத்தினால் எந்தமாதிரியான நன்மைகள் அரசாங்கத்திற்கு கிடைக்கும், அதேமாதிரி பொதுமக்களுக்கு எவ்வாறான நன்மைகள் கிடைக்கப்பெறும் என்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.
எமது நாட்டில் பண வீக்கத்திற்கு ஏற்றவாறு ஏனைய பொருட்களுடன்ஒப்பிடும்போது சிகரெட்டுக்கான வரியையோ அல்லது விலையையோ அரசாங்கம் அதிகரிக்கவில்லை. இதற்கு பிரதான காரணம் சிகரெட்டின் விலைகளை அதிகரிப்பது அரசாங்கத்தின் கைகளில் மாத்திரமில்லை சில உற்பத்தி நிறுவனங்களின் கைகளிலும் இருக்கிறது.
ஆகவே நிதி அமைச்சும், நிதி அமைச்சினுடைய அதிகரிகளும் இந்த வரிக் கொள்கையை சரியான விதத்தில் அமுல்படுத்துவதற்கும், வரிக் கொள்கைகளை உருவாக்குவதற்கும், வரிச் சுட்டெண்களை உருவாக்குதற்கும் முன்வர வேண்டும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வருகின்ற காரணத்தால் கட்சிகள், வேட்பாளர்கள், ஏனைய அரசியல்வாதிகள் இந்த வரிக் கொள்கையை உள்வாங்குவதற்கும், இந்த வரிக் கொள்கையை சரியா விதத்தில் அமுல்படுத்துவதற்கும் முன்வரவேண்டும். இது தொடர்பில் பொது மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு முறையான வரிச் சுட்டெண்ணை உருவாக்குவதால் அதிகளவான இலாபங்கள் எமது நாட்டுக்கு கிடைக்கப்பெறும் என்பதுடன் எமது நாட்டில் உள்ள வல்லுனர்கள் வெளிநாடுகளுக்கு செல்லாமல் எங்களது நாட்டிலேயே இருந்து சேவை புரிவதற்கான சந்தர்ப்பம் எதிர்காலத்தில் ஏற்படும் என்றனர்.