மகாராஷ்டிரத்தில் நாளை (புதன்கிழமை) இரவு 8 மணி முதல் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி மக்களிடம் இரவு 8.30 மணிக்கு உரையாடப்போவதாக உத்தவ் தாக்கரே அறிவித்திருந்தார்.
இதன்படி மக்களிடம் உரையாற்றிய உத்தவ் தெரிவித்தது:
நாளை இரவு 8 மணி முதல் கடுமையான கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. நாளை முதல் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலாகிறது. இதை பொது முடக்கம் என அறிவிக்க மாட்டேன் என்றார்.
இதையடுத்து, மாநில அரசு வெளியிட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது:
திரையரங்குகள், அரங்குகள், கேளிக்கைப் பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு அரங்குகள் உள்ளிட்டவை மூடப்படும். திரைப்படம் மற்றும் நாடகங்களுக்கான படப்பிடிப்பு ரத்து செய்யப்படுகிறது. வணிக வளாகங்கள் செயல்படாது. அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற செயல்பாடுகளுக்கு ஏப்ரல் 14 இரவு 8 மணி முதல் மே 1 காலை 7 மணி வரை தடை விதிக்கப்படுகிறது.