ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாஃப்டரின் மர்ம மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை உறுதியான முன்னேற்றம் எதனையும் வெளியிடவில்லை.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அரசாங்கப் பகுப்பாய்வாளரிடம் சமர்ப்பிக்கப்பட்ட வழக்குடன் தொடர்புடைய 14 விடயங்கள் தொடர்பில் இதுவரையில் அறிக்கைகள் கிடைக்கப்பெறவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்னும் உறுதியான முடிவை எடுக்கவில்லை எனவும், நீதிமன்றில் கூட எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும் தல்துவ தெரிவித்துள்ளார்.
“கடந்த வாரம் அளுத்கடை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பான மாஜிஸ்திரேட் விசாரணை நடந்தது. அந்த நேரத்தில், ஷாஃப்டரின் குடும்பத்தினர் விசாரணையை ஊடகங்களுக்கு வெளிப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். அதனால்தான் ஊடகங்கள் இல்லாமல் இந்த விசாரணை நடத்தப்பட்டது.
அங்கு தினேஷ் ஷாஃப்டரின் மனைவி மற்றும் அவரை மயாத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கிரிஷ் பெரேராவிடம் மட்டுமே ஆதாரம் பதிவு செய்யப்பட்டது. மயானத்தில் பணிபுரியும் இரண்டு பணியாளர்கள் மற்றும் பலரின் சாட்சியங்கள் ஆராயப்பட வேண்டும்.
அரசாங்க பகுப்பாய்வாளரின் அறிக்கைகளுக்காகவும் காத்திருக்கிறோம். மயானத்தில் வேலை செய்பவர் ஒருவர் கார் அருகே யாரையோ பார்த்ததாக கூறுகிறார். அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்றும் கூறியுள்ளார். அப்படியிருக்கையில், இது தற்கொலை என்று எப்படி உறுதியாகச் சொல்ல முடியும்? ஒருவேளை யாராவது அத்தகைய கருத்தை விரும்பலாம். அப்படிச் சொல்ல நாங்கள் நீதிமன்றத்துக்குப் போகவில்லை. நாங்கள் எப்படி அவ்வாறு கூற முடியும்” என குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தினேஸ் ஷாஃப்டர் இதற்கு முன்னர் பொரளை மயானத்திற்குச் சென்று தற்கொலை செய்து கொள்வதற்கான பயிற்சி பெற்றதாக இதுவரை விசாரணையில் இருந்து தெரியவரவில்லை என்றும் அந்த அதிகாரி கூறினார்.